போலீசார் சுட்டதில் கருப்பின வாலிபர் பலி; வெடித்தது போராட்டம்

அமெரிக்காவின் மின்னசொட்டா மாகாணத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஜார்ஜ் பிளாயிட் என்ற கருப்பின வாலிபரின் கழுத்தில் போலீஸ்காரர் ஒருவர் தனது கால் முட்டியால் அழுத்தியதில் அந்த வாலிபர் உயிரிழந்தார். இதையடுத்து போலீசார் நிறவெறியுடன் நடந்து கொண்டதாக கூறி நாடு முழுவதும் போராட்டங்களும், வன்முறைகளும் நடந்தன.

போலீசாரின் அடக்குமுறை மற்றும் நிறவெறிக்கு எதிரான போராட்டங்கள் ஐரோப்பிய நாடுகளிலும் பரவின. இந்த போராட்டங்களில், பெருமளவிலான மக்கள் பேரணியாக திரண்டனர். இந்த நிலையில், அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் வென்டி என்ற உணவகத்தின் வெளியே கருப்பின வாலிபர் ஒருவர் படுத்து இருக்கிறார் என நேற்று முன்தினம் இரவு போலீசாருக்கு தகவல் சென்றுள்ளது. இதனால் அந்த பகுதிக்கு சென்ற போலீசார் ரேஷார்ட் புரூக்ஸ் என்ற அந்த 27 வயது வாலிபரை விசாரணைக்கு அழைத்து உள்ளனர்.

ஆனால் அவர் வர மறுத்ததுடன் போலீசாரிடம் இருந்து தப்பியோட முயன்றுள்ளார். இதனால் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் அவர் கொல்லப்பட்டார். இதுபற்றிய வீடியோவும் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அந்நாட்டில் மீண்டும் போராட்டம் வெடித்துள்ளது.

போராட்டக்காரர்கள் சம்பவம் நடந்த பகுதியில் அமைந்த வென்டி உணவகம் மீது தீ வைத்து கொளுத்தினர். பின் 45 நிமிடங்கள் போராடி தீ கட்டுப்படுத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய போலீஸ் அதிகாரி காரெட் ரோல்ப் பணியில் இருந்து நீக்கப்பட்டார். காவல் துறை உயரதிகாரி எரிக்கா ஷீல்ட்ஸ் தனது பணியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். கொல்லப்பட்ட புரூக்சின் இளைய மகளுக்கு நேற்று பிறந்த நாள் ஆகும்.

Related posts