ஓகஸ்டில் தேர்தலை நடத்தி முடிக்க திட்டம்

பொதுத் தேர்தலை ஓகஸ்ட் மாத இறுதிக்குள் நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளதுடன் நாளை திங்கட்கிழமை தேர்தலுக்கான திகதி அறிவிக்க இருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

பொதுத் தேர்தலை தாமதப்படுத்தும் எண்ணம் எதுவும் ஆணைக்குழுவுக்கு கிடையாதெனவும் அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க முடியாதெனவும் அவர் குறிப்பிட்டார்.

தேர்தலை நடத்துவதில் காலம் கடத்தும் எண்ணம் ஆணைக்குழுவுக்கு கிடையாது. முன்னைய தேர்தல்களை போன்று இதனை பார்க்க முடியாது.

கொரோனா தொற்று பரவலுக்கு முகம்கொடுத்துக் கொண்டே தேர்தலை நடத்த வேண்டியுள்ளதாகவும் இது சவால் மிக்கதொரு விடயமானதாகவும் இருப்பதாக மஹிந்த தேசப்பிரிய சுட்டிக்காட்டினார்.

தேர்தல் சட்டவிதிகளை பேணுவதோடு சுகாதாரத்துறையின் வழிகாட்டல்களையும் அவசியம் பின்பற்ற வேண்டியதன் தேவை இன்று ஏற்பட்டுள்ளது. இதன் பொருட்டு மாவட்ட மட்டத்தில் போதிய அறிவுறுத்தல்கள் பெற்றுக் கொடுக்க வேண்டியுள்ளது.

தேர்தல் அலுவலக அதிகாரிகள் மட்டுமன்றி கட்சிகள், வேட்பாளர்களும் புதிய நடைமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும். முக்கியமாக சுகாதாரத்துறையின் வழிகாட்டல்களை அனைவரும் பொறுப்புடன் பேண வேண்டும்.

அனைத்து வாக்களிப்பு நிலையங்கள் தேர்தல் தினத்துக்கு முன்னைய இரண்டு தினங்களும் வாக்களிப்பு நாளன்றும் சுகாதார அதிகாரிகளால் கடுமையான சோதனைக்குட்படுத்தப்பட வேண்டியுள்ளது. ஒரு கோடி 60 இலட்சத்திற்கும் கூடுதலான வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில் சுகாதார நடவடிக்கைகளை கையாளும்போது நிறையவே அசௌகரியங்கள் ஏற்படுவதை தவிர்க்க முடியாது.

சமூக இடைவெளி பேணப்படும் போது வாக்களிப்பதற்கு கூடுதல் நேரம் எடுக்கலாம். ஆகவே காலை 7 மணிக்குத் தொடங்கும் வாக்களிப்பு மாலை 5 மணிக்கு முடிவுக்கு கொண்டுவரப்படவேண்டும். இதன் பொருட்டு ஒரு வாக்களிப்பு நிலையத்தில் வாக்காளர்களை பல பிரிவுகளாக பிரித்து வாக்களிப்பை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது.

இது குறித்து ஆணைக்குழு ஆராய்ந்து வருகிறது.

அனைத்து வாக்களிப்பு நிலையங்களிலும் சுகாதாரத்துறை அதிகாரிகளும் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். அதே சமயம் சுகாதாரச் செயற்பாடுகளை அவதானிப்பதற்கு பல வாக்களிப்பு நிலையங்களை ஒன்றிணைத்து சுகாதாரத்துறை உயரதிகாரிகளைக் கொண்ட நடமாடும் சேவையும் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்தத் தேர்தலில் சுகாதாரத்துறையினர் தயாரித்து வழங்கியிருக்கும் வழி காட்டல் அறிக்கையை பின்பற்றுவதன் அவசியம் ஏற்பட்டுள்ளது. இந்த வழிகாட்டல் அறிக்கையில் பல்வேறு விடயங்கள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளதுடன் சிபாரிசுகளும் அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளன.

இதில் முக்கியமான மூன்று விடயங்களில் நாம் உறுதியாக உள்ளோம். சமூக இடைவெளியை உரிய முறையில் பேணுவது கட்டாயமாக கடைப்பிடிக்க வேண்டியதுடன் சகலரும் முகக் கவசம் அணிவதும் அடிக்கடி கைகளைக் கழுவிச் சுத்தமாக வைத்திருப்பது என்பனவே அவையாகும்.

இந்த வழிகாட்டல் அறிக்கை, நாட்டு மக்களுக்கும் அதிகாரிகளுக்கும் நாளை திங்கட்கிழமை முதல் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதோடு தொடராக அது குறித்து தெளிவுபடுத்தும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவுள்ளன எனவும் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.

இதேவேளை, இந்தத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்காக விண்ணப்பிக்கும் காலம் நாளைய தினத்துடன் முடிவுக்கு வருகின்றது. அதற்கு முன்னதாக விண்ணப்பங்களை அருகிலுள்ள பிரதேச செயலகங்களில் ஒப்படைக்கப்பட வேண்டும். சுகாதாரத்துறையினரை இத் தேர்தலில் கடமையில் ஈடுபடுத்த விருப்பதால் அவர்களும் தபால் மூல வாக்களிப்புக்கு வாய்ப்பு வழங்கும் முகமாகவே இந்த கால அவகாசம் வழங்கப்படுகிறது.

இந்த விண்ணப்பங்களை நாளை மறுதினம் 09 ஆம் திகதி பிரதேச அலுவலகங்களில் ஒப்படைப்பதற்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. இத் தேர்தலில் கட்சிகளும் வேட்பாளர்களும் பிரசாரக் கூட்டங்களை முற்றாக தவிர்க்க வேண்டும். என்றாலும் அவசியமெனக் கருதப்படும் பட்சத்தில் சமூக இடைவெளியை பேணி 30 பேர் மட்டுப்படுத்தப்பட்ட கலந்தாலோசனைக் கூட்டத்தை நடத்தலாம்.

இந்தத் தேர்தலை நடத்த தீர்மானித்ததன் காரணமாக கொரோனா தொற்று முடிவுக்கு வந்துவிட்டதாக எவரும் கருதமுடியாது. இந்தத் தொற்று அடுத்த இரண்டு வருடங்களுக்கும் நீடிக்குமென சுகாதாரத் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது. இதற்கு நாம் ஈடுகொடுத்தே பயணிக்க வேண்டியுள்ளது.

இதேவேளை, இந்தத் தேர்தலில் புதிய நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டியுள்ளதால் அதற்கு முன்னோடியாக அம்பலாந்தோட்டை பிரதேச செயலகத்தில் விலேகொட, தம்மயுக்திகாராம விகாரையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்தில் வாக்காளர்களைக் கொண்டு இன்று (07) ஞாயிற்றுக்கிழமை வாக்களிப்பு ஒத்திகை ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளது.

நாளை முதல் அதிகளவு பணிகள் உள்ளன. வாக்காளர் அட்டை விநியோகம், தபால்மூல வாக்களிப்பு, தேர்தல் கடமைக்கான மேலதிக ஆளணியை திரட்டல், வாக்களிப்பு நிலையங்கள், வாக்குகள் எண்ணப்படும் நிலையங்கள் ஒழுங்குபடுத்துதல் போன்ற பல பணிகள் நடைபெறவேண்டும். வாக்குச் சீட்டுக்கள் அச்சிடும் பணிகள் இறுதிக் கட்டத்தில் இருப்பதால் அடுத்தவாரத்தில் அவை தேர்தல் ஆணைக்குழுவுக்கு ஒப்படைக்க கூடியதாக இருக்குமென அரசாங்க அச்சகர் கங்கானி லியனகே எமக்கு அறிவித்திருக்கிறார்.

இந்தத் தேர்தலில் வாக்களிப்பு முடிவுவுற்ற உடனேயே அன்றிரவு வாக்குகள் எண்ணப்பட மாட்டாது. மறுதினமே எண்ணப்படும்.அன்றைய தினம் மாலைக்குள் கட்சிகள், சுயேட்சைக் குழுக்கள் பெற்றுக்கொண்ட வாக்குகள் குறித்து முடிவுகைள அறிவிக்கக்கூடியதாக இருக்கும்.

எனினும் விருப்புவாக்கு எண்ணுவதில் தாமதம் ஏற்படலாம். மூன்றாவது அல்லது நான்காவது நாளில் விருப்புவாக்குகளின் முடிவு வெளியிடக் கூடியதாக இருக்குமெனவும் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

சில ஊடகங்கள் நீதிமன்ற தீர்ப்பு வெளியான மறுதினமே தேர்தல் ஓகஸ்ட் 8 அல்லது 15 இல் நடத்த தீர்மானித்திருப்பதாக செய்தி வெளியிட்டன. அவ்வாறான எந்த ஒரு முடிவும் தேர்தல் ஆணைக்குழு எடுக்கவில்லை. இன்றுவரைகூட தீர்க்கமான முடிவு ஏற்படவில்லை. அது குறித்து ஆணைக்குழு தொடர்ந்து ஆராய்ந்து வருகின்றது

எவ்வாறெனினும், ஓகஸ்ட் இறுதி வாரத்தில் தேர்தலை நடத்தக் கூடியதாக இருக்குமென நாம் நம்புகிறோம். அந்தத் திகதியை நாளைய தினமே வெளியிடுவோமெனவும் அவர் தெரிவித்தார்.

எம். ஏ. எம். நிலாம்

Related posts