மன்னிப்பு கேட்ட மனோபாலா

நடிகர் சிங்கமுத்து அளித்த பேட்டியில் தன்னுடைய சினிமா பயணம் குறித்த பல்வேறு விஷயங்களையும் பகிர்ந்து கொண்டார். அதில் நடிகர் வடிவேலு குறித்தும் சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

நடிகர் வடிவேலு மற்றும் சிங்க முத்து இடையே ஏற்கனவே நிலம் தொடர்பாக தகராறு இருந்தது. நீதிமன்றம் வரை இந்த பிரச்சினை சென்ற நிலையில், படங்களிலும் தற்போது இந்தக் கூட்டணி இணைந்து நடிப்பதில்லை.

சமீபத்தில் நடிகர் மனோபாலா நடத்திய யூடியூப் பேட்டியில் கலந்து கொண்ட நடிகர் சிங்க முத்து, வடிவேலு குறித்து சில கருத்துக்களை கூறினார். இந்த நிலையில், கடந்த மாதம் 19-ம் தேதி வடிவேலு, நடிகர் சங்கத்திற்கு புகார் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், நான் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் 30 வருடங்களாக உறுப்பினராக உள்ளேன். மேலும், நடிகர் சங்கத்திற்காக என்னால் முடிந்த உதவிகளைச் செய்து வருகிறேன். நடிகர் மனோபாலா நடத்தும் வேஸ்ட் பேப்பர் என்கிற யூடியூப் சேனலில் மனோபாலா என்னைப் பற்றி சில கேள்விகளை சிங்கமுத்துவிடம் கேட்க, அதற்கு அவர் என்னைப் பற்றி தரக்குறைவாகவும் தவறான செய்திகளையும் பொய்ப் பிரச்சாரங்கள் செய்தும் பதிலளித்துள்ளார்.

அந்த வீடியோவை பல பிரபல நடிகர்கள் உள்ள SIAA லைப் மெம்பர் ஷிப் என்கிற வாட்ஸ அப் குரூப்பிலும் பகிர்ந்துள்ளார். இதனால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். ஏற்கெனவே நில மோசடி விவகாரம் தொடர்பாக எனக்கும் சிங்கமுத்துவுக்கும் இடையேயான வழக்கு நீதிமன்றத்தில் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதை இந்த இடத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். ஆகையினால் மனோபாலா மற்றும் சிங்கமுத்து இருவர் மீதும் நடிகர் சங்க சட்ட விதி எண்: 13-ன் படி தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நடிகர் மனோபாலா கூறும்போது, “வடிவேலுவுக்கும் எனக்கும் 30 வருஷ நட்பு. அவர் என் மேல் ஏன் புகார் கொடுத்தார் என்று தெரியவில்லை. இருந்தாலும் அவரது நட்பை நான் இழக்க விரும்பவில்லை. வடிவேலு என்னை மன்னிச்சிரு என்று கூறியுள்ளார்.

நடிகர் சிங்கமுத்து அளித்த பேட்டியில் தன்னுடைய சினிமா பயணம் குறித்த பல்வேறு விஷயங்களையும் பகிர்ந்து கொண்டார். அதில் நடிகர் வடிவேலு குறித்தும் சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அதில், “நான் வடிவேலு மீது வெறுப்பாகவில்லை. இப்பொழுது கூட அவருடன் நடிக்க தயாராகவே இருக்கிறேன். நான் சந்தானத்துடன் இணைந்து நடித்ததில் இருந்துதான் பிரச்சினை ஆரம்பமானது. சந்தானத்துடன் இணைந்து நான் நடித்தது தெரிந்ததும் அவருக்கு அது பிடிக்கவில்லை. எதுக்கு நம்மளுடைய டிரெண்ட்டை அங்கே சொல்றன்னு கேட்டார். ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ஸ்டைல் இருக்கும். இங்கே யாரும் யாரையும் காப்பி அடிக்கலையே. அது அவருக்கு புரியலை” என்று கூறினார்.

“என்னுடைய மகனை ஹீரோவா நடிக்க வைத்தேன். வடிவேலுக்கு அவருடைய மகனை ஹீரோவாக நடிக்க வைக்கணும்னு ஆசை. ஆனா, அவனுக்கு யாரும் வாய்ப்பு கொடுக்கவில்லை. அவர் மகனை ஹீரோவாக்க முடியவில்லை என்றால் அதற்கு என் மகன் ஏன் ஹீரோவாகக் கூடாது? என்னுடைய பையன் பெரிய ஹீரோவாகிடுவானோன்னு நினைச்சுட்டார். அது அவருக்கு பெரிய சங்கடமாகிவிட்டது.”

“இப்போது கூட வடிவேலுவை நேராக வரச் சொல்லுங்கள். என்ன பிரச்சினை என்று முகத்துக்கு நேராக பேச நான் தயாராக இருக்கிறேன். நான் வடிவேலுவை குறை சொல்ல விரும்பவில்லை. இப்போ கூட அவர் அறியாமையில் செய்துவிட்டதாகத் தான் நினைக்கிறேன். வடிவேலு நல்ல நடிகர், நல்ல திறமைசாலி. கேட்பார் பேச்சை கேட்பார். அதுதான் இந்த நிலைக்கு காரணம்.

8 லட்சத்துக்கு நான் வாங்கிக் கொடுத்த இடத்தை 22 கோடிக்கு விற்றுவிட்டார். நான் அவர் தர வேண்டிய 40 லட்ச ரூபாய் கமிஷன் பணத்தை கேட்பேன் என்று நினைத்து என் மீது வழக்கு தொடர்ந்தாரா என்று எனக்கு தெரியாது. அவருடைய பணத்தை நான் ஏமாற்றிவிட்டதாக தொடரப்பட்ட அந்த வழக்கு முடிவதற்கு இன்னும் பத்து ஆண்டுகள் கூட ஆகலாம். உண்மையாகவே அருமையான நடிகனை இழந்துட்டோம்” என்று நடிகர் சிங்கமுத்து கூறியிருந்தார்.

Related posts