இலங்கையின் மூன்று முக்கிய செய்திகள்..!

நெலுவ பகுதியில் உயிரிழந்த சிறுத்தை ஒன்றின் சடலத்தை வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இது கரும் சிறுத்தை அல்ல எனத் தெரிவித்த வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரி ஒருவர், நெலுவ பகுதியிலுள்ள தனியார் காணியில் இருந்த வலையில் சிக்கி இச்சிறுத்தை இன்று உயிரிழந்துள்ளதாக தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பில் அறிந்த குறித்த பகுதிக்குரிய வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள், இது தொடர்பில் வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளனர்.
உயிரிழந்த இச்சிறுத்தைக்கு பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.
மேலும், குறித்த தனியார் காணி உரிமையாளருக்கு எதிராக வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதோடு, நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய இச்சம்பவம் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்படவுள்ளது.
அண்மையில் இவ்வாறான 03 அரிய வகை சிறுத்தைகள் உயிரிழந்துள்ளமை பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

—–

லிந்துலை, சென்கூம்ஸ் மேற்பிரிவு தோட்டத்தில் இன்று (02) பிற்பகல் குளவிக் கொட்டுக்கு இலக்காகி, பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
அத்தோடு, 07 பேர் குளவி கொட்டுக்கு இலக்காகிய நிலையில் சிகிச்சைக்காக லிந்துலை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
லிந்துலை சென்கூம்ஸ் மேற்பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாயான அலீமா பீபீ (59) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சென்கூம்ஸ் மேற்பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் தேயிலை மலையில் வேலை செய்துகொண்டிருந்தபோது, தேயிலை மலையில் இருந்த குளவிக்கூடு ஒன்று உடைந்து, அதிலிருந்த குளவிகள் கலைந்து வந்து இவர்களை தாக்கியுள்ளது.
இதன்போது குறித்த பெண் தொழிலாளி, குளவிக் கொட்டுக்கு இலக்காகிய நிலையில் பொதுமக்கள் உதவியுடன் லிந்துலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.
மேலும், அவருடன் 03 ஆண் தொழிலாளர்களும் 04 பெண் தொழிலாளர்களும் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
உயிரிழந்த பெண் தொழிலாளியின் சடலம், லிந்துலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

—-

மின்சார வேலியில் சிக்கி விவசாயி ஒருவர் இன்று (02) உயிரிழந்துள்ளதாக, வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
வெல்லாவெளி, திக்கோடை சுரவணையடி ஊற்றைச் சேர்ந்த சீனித்தம்பி சந்திரசேகரம் (50) எனும் விவசாயியே, இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் வழமை போன்று தனது மாட்டுப்பட்டியடிக்கு இன்று அதிகாலை சென்றுள்ளார். அங்கு காட்டு யானைகளிடமிருந்து பாதுகாப்பதற்கு விவசாயிகளால் நிறுவப்பட்டிருந்த மின்சாரத்தைத் தாங்கிச் செல்லும் வேலியைக் கடக்க முற்பட்டபோது, அவர் மின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக, பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

Related posts