தியேட்டர்களுக்கு பதிலாக டிஜிட்டல் தளத்தில் ரிலீசாகும் மேலும் 2 படங்கள்

கொரோனா ஊரடங்கினால் தியேட்டர்கள் 2 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டு உள்ளன. இதனால் புதிய படங்களை நேரடியாக இணையதளத்தில் வெளியிடும் முயற்சியில் சில தயாரிப்பாளர்கள் ஈடுபட்டு உள்ளனர். தமிழில் தயாரான ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள், கீர்த்தி சுரேசின் பெண்குயின், இந்தியில் அமிதாப்பச்சன் நடித்துள்ள குலாபோ சிடோபோ, வித்யாபாலனின் சகுந்தலா தேவி, கன்னடத்தில் உருவான பிரெஞ்சு பிரியாணி, மலையாளத்தில் தயாரான சூவியும் சுஜாதாவும் ஆகிய படங்கள் இணையதளத்தில் வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில் இந்தியில் உருவான விர்ஜின் பானுப்ரியா. தெலுங்கில் ராம்கோபால் வர்மா இயக்கத்தில் தயாரான கிளைமேக்ஸ் ஆகிய மேலும் 2 படங்கள் இணையதளத்தில் வெளியாவது உறுதியாகி உள்ளது.

இதுகுறித்து விர்ஜின் பானுப்ரியா படத்தின் தயாரிப்பாளர் மகேந்திரா தாரிவால் கூறும்போது, “தியேட்டர்களை மீண்டும் திறப்பதில் உறுதியற்ற தன்மை நிலவுகிறது. தியேட்டர்களுக்காக இனிமேல் காத்திருக்கவும் முடியாது எனவேதான் ஓ.டி.டி. தளத்தில் வெளியிட பேசி வருகிறோம்” என்றார். இந்த படத்தில் ஊர்வசி ரவ்தெலா கதாநாயகியாக நடித்துள்ளார். இவர் தமிழில் வெளியான திருட்டுப்பயலே 2 படத்தின் இந்தி ரீமேக்கில் அமலாபால் வேடத்தில் நடித்துள்ளார். கிளைமேக்ஸ் படத்தில் ஹாலிவுட் நடிகை மியா மல்கோவா நடித்துள்ளார். கிளுகிளு காட்சிகள் நிறைந்த திகில் படமாக தயாராகி உள்ளது. இதன் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

Related posts