24 மணிநேரத்தில் 1,06,000 பேருக்கு கரோனா நோய்த் தொற்று

உலகம் முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் சுமார் 1,06,000 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு கூறும்போது, “கடந்த 24 மணிநேரத்தில் உலகம் முழுவதும் சுமார் 1,06,000 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஒரே நாளில் ஏற்பட்ட அதிகபட்ச தொற்று இதுவாகும். கரோனா வைரஸ் நோய்த் தொற்று தொடர்பாக நாம் நீண்ட தூரம் செல்ல வேண்டி இருக்கிறது. பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளில் கரோனா நோய்த்தொற்று பரவுவது குறித்து கவலை கொண்டுள்ளோம்” என்று தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் கரோனா வைரஸால் 50,90,061 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். 20, 24,222 பேர் குணமடைந்துள்ளனர்.
இதில் அமெரிக்காவில் மட்டும் சுமார் 15, 93,039 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 94,941 பேர் பலியாகி உள்ளனர். அமெரிக்காவை அடுத்து ரஷ்யா, பிரேசில் ஆகிய நாடுகள் கரோனா நோய்த் தொற்றால் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
கரோனா நோய்த் தொற்று காரணமாக அமெரிக்கா, உலக சுகாதார அமைப்பு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இவ்விகாரத்தில் சீனாவுக்கு ஆதரவாக உலக சுகாதார அமைப்பு செயல்படுகிறது என்று அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. மேலும், உலக சுகாதார அமைப்புக்கு வழங்கி வந்த நிதியையும் அமெரிக்கா தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.
சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ் அமெரிக்கா, ஐரோப்பா, மத்தியக் கிழக்கு நாடுகள், ஆப்பிரிக்கா, தெற்காசிய நாடுகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts