படப்பிடிப்பு இல்லாமல் வறுமை பழ வியாபாரம் செய்யும் நடிகர்

கொரோனாவால் படப்பிடிப்பு இல்லாமல் வருமானம் இன்றி வறுமையில் தவிக்கும் நடிகர் ஒருவர், தெருவில் தள்ளு வண்டியில் பழ வியாபாரம் செய்யும் தகவல் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா ஊரடங்கினால் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட அனைத்து மொழி திரைத்துறையும் முடங்கி உள்ளது. 2 மாதங்களாக படப்பிடிப்புகள் இல்லாததால் திரைப்பட தொழிலாளர்கள் வருமானம் இன்றி தவிக்கிறார்கள். அவர்களுக்கு முன்னணி நடிகர், நடிகைகள் பலர் உதவி வழங்கி உள்ளனர். திரைப்பட தொழிலாளர்களுக்கு ‘பெப்சி’ நிதி திரட்டி உதவி வருகிறது. நடிகர் சங்கம் சார்பிலும் நிதி திரட்டி நலிந்த நடிகர், நடிகைகளுக்கு உதவி வழங்குகிறார்கள்.

இந்த நிலையில் கொரோனாவால் படப்பிடிப்பு இல்லாமல் வருமானம் இன்றி வறுமையில் தவிக்கும் நடிகர் ஒருவர், தெருவில் தள்ளு வண்டியில் பழ வியாபாரம் செய்யும் தகவல் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த நடிகரின் பெயர் சோலங்கி திவாகர். இவர் பிரபல இந்தி கதாநாயகன் ஆயுஷ்மான் குரானா நடித்துள்ள டிரீம் கேர்ள் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். மேலும் சில படங்களிலும் நடித்துள்ளார்.

அவர் கூறும்போது, “கொரோனா ஊரடங்கினால் பட வாய்ப்புகள் இல்லை. வருமானமும் இல்லை. இதனால் குடும்ப செலவுக்காகவும், வீட்டு வாடகை கொடுக்கவும் பழ வியாபாரம் செய்கிறேன்” என்றார்.

அவர் பழ வியாபாரம் செய்யும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகிறது.

Related posts