பிரிட்டனில் கரோனா பலி எண்ணிக்கை 43 ஆயிரத்தை நெருங்குகிறது

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை பிரிட்டனில் 43 ஆயிரத்தை நெருங்குவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து சர்வதேச ஊடகங்கள் தரப்பில், “புதிதாக வந்த தரவுகளின்படி பிரிட்டனில் கரோனா தொற்றுக்கு 42,990 பேர் வரை பலியாகி உள்ளனர். இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வடக்கு அயர்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து வந்த தகவலின் அடிப்படையில் இந்த இறப்பு எண்ணிக்கை வெளியிடப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.
கடந்த மே 8 ஆம் தேதி வரை பிரிட்டனில் கரோனா தொற்றுக்கு 10,000 பேர் இறந்த நிலையில், தற்போது இந்த எண்ணிக்கை 43 ஆயிரத்தை நெருங்கவுள்ளது.
கரோனா பலி எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் கரோனா தொற்றுக்கு 92,063 பேர் பலியாகி உள்ளனர். இதில் அமெரிக்காவுக்கு அடுத்து இரண்டாம் இடத்தில் பிரிட்டன் உள்ளது. பிரிட்டனில் கரோனா தொற்றுக்கு இதுவரை 2,46,406 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூட சமீபத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்குப் பின் பணிக்குத் திரும்பினார்.
இந்த நிலையில் பிரிட்டனில் சில கட்டுப்பாடுகளுடன் கடந்த வாரம் ஊரடங்கு தளர்த்தப்பட்டது. எனினும் பிரிட்டனில் கரோனா வைரஸின் தாக்கம் குறைந்த பின் ஜூன் 1-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். பொதுமக்கள் கூடும் முக்கியமான இடங்கள் ஜூலை 1-ம் தேதி தான் திறக்கப்படும் என பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் கரோனா வைரஸ் நெருக்கடியை பிரதமர் போரிஸ் ஜான்சன் சரியாகக் கையாளவில்லை என்று விமர்சனங்கள் வலுத்து வருகின்றன.

Related posts