உருவாகும் ‘விண்ணைத்தாண்டி வருவாயா 2’

‘விண்ணைத்தாண்டி வருவாயா 2’ உருவாது தொடர்பாக கெளதம் மேனனுக்கு உறுதியளித்துள்ளார் சிம்பு
கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, த்ரிஷா நடிப்பில் பெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இந்தப் படம் 2010-ம் ஆண்டு பிப்ரவரி 26-ம் தேதி வெளியானது. இந்தப் படத்தின் பாடல்கள், கதையமைப்பு, வசனங்கள் என அனைத்து தரப்பிலும் கொண்டாடப்பட்டது.
இந்தப் படத்துக்குக் கிடைத்த அமோக வரவேற்பால், இதன் 2-ம் பாகத்துக்கான கதையை எழுதி முடித்துள்ளார் கெளதம் மேனன். ஆனால், வெவ்வேறு படங்கள் உருவாக்கத்தில் இருந்ததால் ‘விண்ணைத்தாண்டி வருவாயா 2’ படத்தை தொடாமல் இருந்தார்.
கரோனா ஊரடங்கில் அதிலிருந்து ஒரு பகுதியை மட்டும் எடுத்து குறும்படமாக உருவாக்கியுள்ளார் கெளதம் மேனன். சிம்பு மற்றும் த்ரிஷா இருவரது வீட்டிற்கும் மொபைல் கேமரா உள்ளிட்ட உபகரணங்கள் கொடுத்து அனுப்பியுள்ளார். இருவருக்கு வாட்ஸ்-அப்பில் வசனங்களை அனுப்பிவிட்டு, இருவரிடமும் தொலைபேசி வீடியோ காலிலேயே எங்கு கேமரா வைத்து எப்படி ஷூட் பண்ணவேண்டும் என்று கூறியுள்ளார்.
அதன்படி இருவருமே ஷூட் செய்து கெளதம் மேனனுக்கு அனுப்பியுள்ளனர். இதன் எடிட்டிங், பின்னணி இசைக் கோர்ப்பு உள்ளிட்ட பணிகளை சமூக இடைவெளியுடன் நடத்தி வருகிறது படக்குழு. இதற்கு ‘கார்த்திக் டயல் செய்த எண்’ என்று பெயரிட்டுள்ளது படக்குழு.
இந்தப் படத்துக்காக கெளதம் மேனன் அனுப்பிய வசனங்களைப் படித்தவுடன் அழுதுவிட்டார் சிம்பு. அந்தளவுக்கு வசனங்கள் அவரை ரொம்பவே பாதித்துள்ளது. கெளதம் மேனன் சொன்னபடியே காட்சிகளை எல்லாம் ஷூட் செய்து அனுப்பிவைத்துள்ளார் சிம்பு. பின்பு கெளதம் மேனனை அழைத்து “இந்தக் கதை ‘கார்த்திக் டயல் செய்த எண்’ என்ற குறும்படத்துடன் நிற்கக் கூடாது. கண்டிப்பாக ‘விண்ணைத்தாண்டி வருவாயா 2’ பண்ணுங்கள். எப்போது வேண்டுமானாலும் தேதிகள் கேளுங்கள், உடனே கொடுத்து நடிக்கிறேன்” என்று உறுதியளித்துள்ளார் சிம்பு.
சிம்புவின் இந்தப் பேச்சால் மிகவும் சந்தோஷமடைந்துள்ளார் கெளதம் மேனன். ஆகையால், ‘கார்த்திக் டயல் செய்த எண்’ குறும்பட வெளியீட்டுக்குப் பிறகு ‘விண்ணைத்தாண்டி வருவாயா 2’ அறிவிப்பு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார்கள்.

Related posts