உன்னதத்தின் ஆறுதல்! வாரம் 20. 20

சந்தோசம் என்பது எல்லாம் இருக்கும்போது மட்டும் இருக்கின்ற மகிழ்ச்சி அல்ல. சகோதரன். பிரான்சீஸ் அந்தோனிப்பிள்ளை.

ரெகொபோத் ஊழியங்கள் – டென்மார்க்கிற்காக பிரார்த்திப்போம்.நாம் அனைவரும் ஒருவிசை இறுதியுத்தத்தில் மரணத்தைத் தழுவியவர்களின் உற்றார் உறவினருக்காகவும், சகலத்தையும் இழந்து இன்றுவரை நிர்க்கதியாக வாழ்ந்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்காகவும் தேவனை நோக்கி பிரார்திப்போம்.

ஆண்டவர் என்றென்றைக்கும் கை விடமாட்டார். அவர் சஞ்சலப்படுத்தினாலும் தமது மிகுந்த கிருபையின்படி இரங்குவார். புலம்பல் 3:31-32.

தேவரீர் எம்மைக் கைவிட்டார் என்று சொல்லக்கூடிய அளவிற்கு தாங்கொணாத் துயரத்தை அனுபவித்த மக்கள் அனைவருக்காகவும் உம்மிடத்தில் வருகிறோம் பிதாவே. உம்முடைய மகா பெரிதான கிருபையின்படி எமது இனத்;து மக்களுக்கு இரங்கும்படியாக முழங்கால் படியிடுகிறோம்.இனி வருங்காலத்தில் இலங்கை மக்கள் மத்தியில் தேவன் எங்களைக் கைவிட்டார் என்கிற வார்த்தை அவர்களின் இருதயங் களில் வேண்டாம் பிதாவே.

மாறாக தேவனின் மகாபெரிதான கிருபையினால் காக்கப்பட்டோம் என்று சொல்லக் கூடியவாறு எமது மக்களைக் காத்துக்கொள்ளும் படியாக மன்றாடி நிற்கிறோம் அப்பா. எல்லாவற்றையும் இழந்து நிற்கதியாக இருக்கும் மக்கள், உம்முடைய நாமத்தினால் ஆறுதலை, அமைதியை, சமாதானத்தை, இளைப்பாறுதலைக் கண்டு கொள்ள உதவி செய்யும் பிதாவே. ஆண்டவரே அமைதிக்கான செயற்பாடுகளில் இணக்கமும் இரக்கமும் ஏற்பட உதவிசெய்யும். உண்மையும் உத்தமமுமான ஓர் தீர்வு ஏற்பட்டு, தமிழ் மக்கள் பயமின்றி சுபீட்சமாக வாழ வழிசெய்யும்படியாக தாழ்மையுடன் வேண்டி நிற்கிறோம் பிதாவே, ஆமென்.

ஜீவமார்க்கத்தை எனக்குத் தெரியப்படுத்துவீர், உம்முடைய சமுகத்தில் பரிப10ரண ஆனந்தமும், உம்முடைய வலதுபாரிசத்தில் நித்தியபேரின்பமும் உண்டு. சங்கீதம் 16: 11

அழிவை நோக்கி விரைந்தோடும் இன்றைய உலகத்தில் மக்கள் சந்தோசத்தை, சமாதானத்தை, அமைதியை, ஆனந்தத்தைத் தேடிஅலைவதைக் காணக்கூடியதாக உள்ளது. அப்படித் தேடினாலும் அடைந்து கொள்ள முடியாத ஒன்றாக மக்களுக்கு இருப்பது வேதனைக் குரியது. ஆனால் வேதம் சொல்கிறது உம்முடைய சமூகத்தில், அதாவது தேவ சமூகத்தில் இவைகள் அனைத்தும் உள்ளது என்று. இதை விளங்கிக் கொள்ள பின்வரும் வேதப்பகுதியை தியானத்தோடு வாசிப்போம்

கர்த்தர் என் சுதந்தரமும் என் பாத்திரத்தின் பங்குமானவர், என் சுதந்தரத்தை தேவாPர் காப்பாற்றுகிறீர். நேர்த்தியான இடங்களில் எனக்குப் பங்கு கிடைத்தது, ஆம், சிறப்பான சுதந்தரம் எனக்கு உண்டு. எனக்கு ஆலோசனை தந்த கர்த்தரைத் துதிப்பேன், இராக்காலங்களிலும் என் உள்ளிந்திரியங்கள் என்னை உணர்த்தும். கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்.

அவர் என் வலதுபாரிசத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படுவதில்லை. ஆகையால் என் இருதயம் ப10ரித்தது, என் மகிமை களிகூர்ந்தது, என் மாம்சமும் நம்பிக்கையோடே தங்கியிருக்கும். என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடீர், உம்முடைய பரிசுத்தவானை அழிவைக் காணவொட்டீர். ஜீவமார்க்கத்தை எனக்குத் தெரியப்படுத்துவீர், உம்முடைய சமுகத்தில் பரிப10ரண ஆனந்தமும், உம்முடைய வலதுபாரிசத்தில் நித்தியபேரின்பமும் உண்டு. சங்கீதம் 16:5-11

தேவன் தமது கிருபையால் மனிதகுலத்தை அழிவில் இருந்து மீட்டெடுத்தார். பாவத்தின் சம்பளம் மரணம். அதாவது அழிவு. அந்த அழிவில் இருந்து மனுக்குலத்தை மீட்டெடுப்பதற்காக தமது ஒரேபேறான குமாரனாகிய இயேசுவை உலகிற்கு அனுப்பி, மனுக்குலத்தை விடுதலைப்படுத்தினார். அவரை விசுவசிப்பதன் மூலம் மனுக்குலம் தேவனுடைய பங்காக மாற்றப்பட்டது.

அது மனுக்குலத்திற்கு கிடைத்த மிகப்பெரிய சுதந்தரம் ஆகும். அந்தப் பங்கு மனிதர்களின் உள் இருதயங்களை அறிந்து உணர்த்தி பாவவழிகளில் இருந்து மனுக்குலத்தை காக்க உதவுகிறது. அந்த உணர்வு தேவனை மனிதனுக்கு முன்பாக வைத்திருக்க வாஞ்சையை ஏற்படுத்துகிறது. அந்த வாஞ்சை சர்வவல்ல தேவன் மக்களோடு இருக்கிறார் என்ற உணர்வைக் கொடுக்கிறது. அந்த உணர்வு எமக்கு பெலனாக இருக்கிறது.

அதனால் மக்களுக்கு மகிழ்சியும், நம்பிக்கையும் ஏற்படும். அந்த நம்பிக்கை அழிவில் இருந்து மக்களைக் காத்து, நித்திய வழியிலே அதாவது தேவன் விரும்பும் வழியில் மக்களை நடத்தி, பேரின்ப சந்தோநத்தை, ஆனந்தத்தைக் கொடுக்குமாம். இப்போது உணர்ந்திருப்பீர்கள் தேவனுடைய வழியின் நன்மை பற்றி.

இதை நாம் இன்னும் அதிகமாக விளங்கிக்கொள்ள புலம்பல் 3:22-26 வரை வாசிப்போம். நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை. அவைகள் காலைதோறும் புதியவைகள். உமது உண்மை பெரியதாயிருக்கிறது. கர்த்தர் என் பங்கு என்று என் ஆத்துமா சொல்லும், ஆகையால் அவரிடத்தில் நம்பிக்கை கொண்டிருப்பேன். தமக்குக் காத்திருக் கிறவர்களுக்கும், தம்மைத் தேடுகிற ஆத்துமாவுக்கும் கர்த்தர் நல்லவர். கர்த்தருடைய இரட்சிப்புக்கு நம்பிக்கையோடு காத்திருக்கிறது நல்லது.

இப்போது விளங்கியிருப்பீர்கள் ஒரு மனிதனுடைய மகிழ்ச்சி அவனுடை வாழ்விலோ, மனதிலோ தங்கியிருப்பதில்லை என்று. மாறாக அது தேவனால். இயேசு கிறிஸ்துவை தனது சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டு தேவனுடன் வாழும் வாழ்வில் தங்கியுள்ளது என்று.

நாம் இந்த உலகில் வாழ்வதற்கான சகல காரியங்களையும் செய்து கொண்டு, எமது சிந்தனை செயல் நினைவுகளை தேவனிடத்தில் வைத்திருக்க வேண்டும். அவ்வாறு வைத்து வாழும் போது என்ன விதமான கஸ்டங்கள், துன்பங்கள் வந்தாலும் அவை தேவனிடத்தில் இருந்து நம்மை பிரிக்காது. இந்த தேவனுடைய பரிபூரண ஆனந்தம் நம்மை எல்லாத் தீங்கிற்கும் விலக்கிக் காத்துக் கொள்ளும்.

இந்த மானிட வாழ்வில் எனக்கு சந்தோசமே இல்லை என்று பரிதவிக்கும் அன்பிற்குரியவர்களே, நீ சகலத்தையும் இழந்தவன், பலவீனன், நாதியற்றவன் என்று யார் சொன்னது? ஆபகூக் என்ற தேவமனிதன் இவ்வாறு சொல்கிறான்.

அத்திமரம் துளிர்விடாமற்போனாலும், திராட்சச்செடிகளில் பழம் உண்டாகாணமற் போனாலும், ஒலிவமரத்தின் பலன் அற்றுப்போனாலும், வயல்கள் தானியத்தை விளைவியாமற் போனாலும், கிடையில் ஆட்டுமந்தைகள் முதலற்றுப் போனாலும், தொழுவத்திலே மாடு இல்லாமற்போனாலும், நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியா யிருப்பேன், என் இரட்சிப்பின் தேவனுக்குள் களிகூருவேன். ஆபகூக் 3:17-18.

இதன் கருத்து உனது வாழ்வில் எல்லாவற்றையும் இழந்து வாழ்வு வெறுத்த நிலையில் வாழ்ந்தாலும், இன்னும் உன்வாழ்வில் ஓர் நம்பிக்கை உண்டு என்பதுதான். நீ நம்பினாலும் நம்பாவிட்டாலும் இதுதான் உண்மை. சந்தோசம் என்பது எல்லாம் இருக்கும்போது மட்டும் இருக்கின்ற மகிழ்ச்சி அல்ல. எல்லாம் இல்லாமற் போனாலும் நம்பிக்கையோடு மேலே நோக்கும் உன்னத மகிழ்ச்சிதான் உண்மையான சந்தோசம். நம்பிக்கையில் சந்தோசமாயிருங்கள். இதுதான் ஆபகூக் என்ற தேவ மனிதன் ஆனுபவித்த சந்தோசம். அதுவே அந்த அடியானின் சந்தோசம்.

இன்று இதுவே உனக்கு ஆறுதலையும் சந்தோசத்தையும் தரட்டும். என் தேவனிற்குள் களிகூருவேன் என்று இப்போது சொல்லுவாயா. காரணம் தேவன் இன்று ஜீவமார்க்கத்தை உனக்குத் தெரியப்படுத்தியிருக்கிறார். அவருடைய (தேவனுடைய) சமுகத்தில் பரிப10ரண ஆனந்தமும், அவருடைய (தேவனுடைய) வலதுபாரிசத்தில் நித்தியபேரின்பமும் உண்டு. அந்த பரிபூரண ஆனந்தத்தை உங்கள் வாழ்வில் அடைந்துகொள்ள என்னுடன் சேர்ந்து இந்த ஜெபத்தை தேவனிடம் ஒப்புவி.

அன்பின் பரலோக பிதாவே, எனது வாழ்வில் எதை இழந்தாலும் உம்மை இழந்து விடாமல் வாழ எனக்கு உதவி செய்யும் ஐயா. உமது சமூகத்தில் மெய்யான ஆறுதல் சந்தோசம் உண்டென்று விசுவசிக்கிறேன். அந்த சந்தோசத்தை எனது வாழ்வில் கண்டுகொள்ளவும், காத்துவாழவும் உதவி செய்யும் பிதாவே, ஆமென்.

கர்த்தர் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக.
Bro. Francis T. Anthonypillai. Rehoboth Ministries – Praying for Denmark.

Related posts