என் இனிய தமிழ் மக்களே பாரதிராஜா பதில்

என் இனிய தமிழ் மக்களே’ என ஒவ்வொரு முறையும் பேச்சைத் தொடங்குவது ஏன் என்பதற்கு பாரதிராஜா பதிலளித்துள்ளார்.
தமிழ்த் திரையுலகில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் பாரதிராஜா. சீனியர் இயக்குநர் என்பதால் தமிழ்த் திரையுலகில் இவருடைய பேச்சுக்கு எப்போதுமே மரியாதை உண்டு.
எந்தவொரு பத்திரிகையாளர் சந்திப்பு, இசை வெளியீட்டு விழா எனக் கலந்து கொண்டாலும் தன் பேச்சைத் தொடங்கும் முன்பு ‘என் இனிய தமிழ் மக்களே’ என்றுதான் தொடங்குவார் பாரதிராஜா. பல வருடங்களாகவே இதை வழக்கமாகவே வைத்துள்ளார்.
தற்போது ‘என் இனிய தமிழ் மக்களே’ என்று ஒவ்வொரு முறையும் கூறி பேச்சைத் தொடங்குவது ஏன் என்பதற்கு பாரதிராஜா விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
“நான் பெரிதாக கல்லூரிகளில் போய் படித்ததில்லை. புழுதி மண், என் மக்கள், செடிகள், பக்கத்து வீட்டுக் கிழவிகள் என இவற்றைத்தான் படித்தேன். இவ்வளவு பெரிய ஆளாக இன்று இருக்கிறேன் என்றால் அதற்குக் காரணம் என் சொந்த மக்கள்தான். இவர்கள் தான் பாசத்துக்குரிய என்னை இங்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்கள்.
‘சிகப்பு ரோஜாக்கள்’, ‘ஒரு கைதியின் டைரி’ மட்டுமே வேறு மாதிரி செய்திருப்பேன். என் மக்கள், என் மொழி, என் இனம் என்றே நான் வாழ்ந்துவிட்டேன். அவர்கள்தான் என்னை இந்த அளவுக்கு உயர்த்தி இருக்கிறார்கள். அதனால்தான் என் இனிய தமிழ் மக்களே என்று சொல்லத் தொடங்கினேன்”.
இவ்வாறு பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

Related posts