மதுபான கடைகளில் மொய்ப்பது போல திரையரங்கும் வருவார்கள்..!

திரையரங்குகளுக்கு மக்கள் வருவது குறித்து இயக்குநர் அனுபவ் சின்ஹா கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுக்கவே கரோனா அச்சுறுத்தலால் மே 17-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் வெள்ளித்திரை, சின்னத்திரை படப்பிடிப்புகள் எதுவுமே நடைபெறவில்லை. கரோனா ஊரடங்கு முடிந்தால், திரையரங்குகள் எப்போது திறக்கப்படும் என்பதே தெரியாமல் உள்ளது.
இதனிடையே, திரையரங்குகள் திறந்தாலும் மக்கள் பழைய மாதிரி வருவார்களா என்று பல தயாரிப்பாளர்கள் பயத்துடன் இருக்கிறார்கள். இதனாலேயே பல்வேறு பிரம்மாண்டப் படங்களின் தயாரிப்பாளர்கள், தங்களுடைய வெளியீட்டுத் தேதியை அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைத்துவிட்டார்கள்.
இது தொடர்பாக இந்தி திரையுலகின் முன்னணி இயக்குநர் அனுபவ் சின்ஹா கருத்து தெரிவித்துள்ளார். ‘முல்க்’, ‘ஆர்டிகிள் 15’, ‘தப்பட்’ உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கியுள்ள அனுபவ் சின்ஹா தனது சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:
“இந்தியாவில் திரையரங்க வியாபாரத்தில் எதுவும் மாறாது. எதுவும். இங்கு பிரம்மாண்டம் என்பது படங்கள் தொடர்பானது மட்டுமல்ல. திரைப்படம் என்பது ஒரு நிகழ்வு. சமூக நிகழ்வு. அது மாறாது. மதுபானக் கடைகளுக்கு வெளியே இருக்கும் கூட்டத்தைப் பார்த்தீர்கள் என நினைக்கிறேன்”
இவ்வாறு அனுபவ் சின்ஹா தெரிவித்துள்ளார்.

Related posts