துரோகத்தின் பின்னணி: இயக்குநர் வெற்றிமாறன்

தனது கதைக்களங்களில் இருக்கும் துரோகத்தின் பின்னணி குறித்து இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.
‘அசுரன்’ படத்தின் பிரம்மாண்டமான வெற்றியால் இந்திய அளவில் அறியப்படும் இயக்குநராக மாறியுள்ளார் வெற்றிமாறன். 2007-ம் ஆண்டு ‘பொல்லாதவன்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ‘ஆடுகளம்’, ‘விசாரணை’, ‘வடசென்னை’ மற்றும் ‘அசுரன்’ என இதுவரை 5 படங்கள் மட்டுமே இயக்கியுள்ளார்.
அனைத்துக் கதைக்களங்களிலுமே துரோகம் என்பது பிரதானமாக இருக்கும். இது தொடர்பாக இயக்குநர் வெற்றிமாறன் கூறியிருப்பதாவது:
“எனது அத்தனை திரைக்கதைகளிலும் துரோகம் என்ற விஷயம் இருப்பது தெரிந்து நான் ஆச்சரியப்பட்டேன். முதல் இரண்டு படங்களில் எனக்கு அது தெரியவில்லை. ‘விசாரணை’ படத்துக்குப் பிறகு அதை மீண்டும் பயன்படுத்தமாட்டேன் என்று நினைத்தேன்.
ரசிகர்களை சுவாரசியப்படுத்த துரோகத்தைக் காட்டுவது ஒரு கருவி என்று பார்க்கிறேன். ஒரு சில ஆதார உணர்வுகளை எல்லோராலும் புரிந்து கொள்ள முடியும். எனது படங்களில் ஆதாரமாக ஒரு பயம் இருக்கும். ஏதோ ஒன்று தவறாக நடக்கப் போகிறது என்பதை உணர்வீர்கள்.
ஒரு சந்தோஷமான காட்சி வந்தால் கூட, ஏன் எல்லோரும் சந்தோஷமாக இருக்கின்றனர். ஏன் இவ்வளவு மந்தமாக இருக்கிறது. ஏதாவது தவறாக நடக்கிறதோ என்று யோசிகக் ஆரம்பித்துவிடுவீர்கள். துரோகம் மற்றும் பழிவாங்குதலோடு சம்பந்தப்பட்டவை பயம் மற்றும் குற்ற உணர்ச்சி போன்ற உணர்வுகள். அப்படியான சில ஆதிகால உணர்ச்சிகளைக் கையிலெடுக்கும்போது அது பெருமளவு வரவேற்பைப் பெறுகிறது”.
இவ்வாறு இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.

Related posts