‘துப்பாக்கி 2’ வதந்தி: முற்றுப்புள்ளி வைத்த சந்தோஷ் சிவன்

துப்பாக்கி 2′ குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன்
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், காஜல் அகர்வால், சத்யன், ஜெயராம், வித்யூத் ஜாம்வால் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘துப்பாக்கி’. 2012-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில்தான் முதன் முதலில் விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி இணைந்தது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்தப் படத்துக்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது. இந்தப் படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார்.
தற்போது ‘மாஸ்டர்’ படத்துக்குப் பிறகு மீண்டும் விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி இணைகிறது. 4-வது முறையாக இணையும் இந்தக் கூட்டணியின் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது. தமன் இசையமைப்பாளராக பணிபுரியவுள்ளார். கரோனா அச்சுறுத்தலால் இந்தப் பணிகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இந்தப் படம் ‘துப்பாக்கி 2’ ஆக இருக்கலாம் என செய்திகள் வெளியாகின. இந்தத் தருணத்தில் ‘துப்பாக்கி’ படத்தின் ஒளிப்பதிவாளர் படத்தில் இடம்பெற்ற பிரபலமான காட்சிகளின் புகைப்படத்தை ஒன்றிணைந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். இதனால் விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி படத்தில் சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவாளராக பணிபுரியுள்ளார். அது ‘துப்பாக்கி 2’ தான் என்பதற்காக இந்த தருணத்தில் இந்தப் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் எனத் தெரிவித்தனர்.
சந்தோஷ் சிவனின் இன்ஸ்டாகிராம் பதிவை வைத்து பலரும் செய்திகளை வெளியிட்டனர். இது பெரும் விவாதமாக மாறியது. இதனைத் தொடர்ந்து சந்தோஷ் சிவன் தனது ட்விட்டர் பதிவில் “எனது இன்ஸ்டாகிராம் பதிவில் இதர படங்களின் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளேன். இதில் எந்தவொரு குறிப்புமே இல்லை” என்று தெரிவித்துள்ளார்.
சந்தோஷ் சிவனின் இந்தப் பதிலால், சமீப நாட்களாக ‘துப்பாக்கி 2’ குறித்த செய்திகள், வதந்திகள் அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Related posts