அரசியலுக்கு வரப்போகிறேன் என சினிமாவில் காட்டாதது ஏன்?

அரசியலுக்கு வரப்போகிறேன் என சினிமாவில் காட்டாதது ஏன் என்று கமலிடம் கேள்வி எழுப்பினார் விஜய் சேதுபதி. அதற்கு கமலும் பதிலளித்துள்ளார்.
கரோனா அச்சுறுத்தலால் பிரபலங்கள் அனைவருமே வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்கள். தங்களுடைய சமூக வலைதளம் மூலம் நேரலைப் பேட்டியாகக் கொடுத்து வருகிறார்கள். இதில் கமல் – விஜய் சேதுபதி இருவரும் பங்கேற்ற நேரலை கலந்துரையாடல் நிகழ்ச்சி இன்று (மே 2) நண்பகல் 12 மணியளவில் தொடங்கி 1:30 மணி வரை நடைபெற்றது.
இந்த நேரலைப் பேட்டியில், அரசியலுக்கு வரப்போகிறேன் என்பதற்கான அறிகுறியை சினிமாவில் காட்டாதது ஏன் என்ற கேள்வியை விஜய் சேதுபதி, கமலிடம் எழுப்பினார். அதற்கு கமலும் பதிலளித்தார். அந்தப் பகுதி:
விஜய் சேதுபதி: நீங்கள் அரசியலுக்கு வந்ததைப் பெரிதாக வரவேற்கிறேன் சார். இத்தனை ஆண்டுகள் சினிமாவை நேர்மையாக எங்களுக்குக் கொடுத்த மனுஷன் அரசியலுக்கு வரும்போது, இதே அளவுக்கு நேர்மை அரசியலிலும் இருக்கும் என்பது என் நம்பிக்கை சார்.
கமல்: நான் யார் என்பதை உங்களுக்கு மறு அறிமுகம் செய்ய வேண்டும். இவ்வளவு நேரம் நீங்கள் என்னிடம் பேசியதே கிடையாது. ஆர்.சி.சக்தி, சந்தானபாரதி உள்ளிட்டோர் என்னை முழுமையாகத் தெரிந்து கொண்டதைப் போல் நீங்களும் தெரிந்துகொள்ள வேண்டும். சில நண்பர்களை இழக்கும்போது, அவ்வளவு தான் நட்பு என்று முடிவு செய்ய முடியாது அல்லவா. அதற்கு ஏற்ற மாற்று ஆட்களை எல்லாம் தேடிக் கொண்டிருக்கிறேன். அதுவாக நீங்கள் ஏன் இருக்கக் கூடாது என்பதுதான்.
விஜய் சேதுபதி: கிடைத்தால் சந்தோஷம்தான் சார். ஒரு மேடையில் இளையராஜா சார் நீங்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அரசியலுக்கு வரப்போவதற்கு ஒரு வசனம் கூட சினிமாவில் நீங்கள் கொடுக்கவில்லை. அதற்கான காரணம் என்ன?
கமல்: உன்னுடைய எந்த சினிமாவில் அரசியல் இல்லை என்று என் நெருங்கிய நண்பர்கள் சொல்வார்கள். உற்றுக் கவனித்தால் அனைத்திலும் ஒரு கொட்டு இருக்கும். அடி இருக்கும். ஏதாச்சும் ஒன்று வைத்திருப்பேன். ‘வறுமையின் நிறம் சிவப்பு’ காலத்திலிருந்து சொல்கிறேன். ரொம்ப தைரியமான சில கருத்துகள் எல்லாம் சொல்லியிருப்போம். ‘சத்யா’ படத்தில் நேரடியாக அரசியலே பேசியிருப்போம். ‘தேவர் மகன்’ படத்தில் சொல்லாமல் சொல்லியிருப்போம்.
நிஜத்தில் ‘தேவர் மகன்’ படத்துக்கு ‘நம்மவர்’ என்றுதான் நானும் அனந்துவும் தலைப்பு வைக்க முடிவு செய்தோம். ஆனால், வாலி அண்ணாதான் ‘தேவர் மகன்’ தான்டா சரியான பெயர் என்றார். அனைவரும் வழிமொழியவே வைத்துவிட்டோம். அதற்காக கோபப்பட்டவர்கள் எல்லாம் உண்டு. நான் சொல்ல வந்த கருத்தைவிட்டு, சின்ன சண்டைகளான சாதிச் சண்டைகள் தொடங்கிவிட்டன. அது தமிழகத்துக்கு ரொம்பப் பிடிக்கும். அடுத்து ‘ஹே ராம்’ படம். காலம் செல்லச் செல்ல அது இன்னும் தீவிரமான அரசியல் படமாக மாறிக் கொண்டிருக்கிறது. இன்றைக்கு அந்தப் படத்தைப் பார்க்கும் போது கூட சில இடங்களில் நாக்கைக் கடித்துக் கொண்டேன். “ஆத்தி.. இப்படிச் சொல்லிட்டோமே.. கொஞ்சம் அளந்து போட்டிருக்கலாமே. காரம் அதிகமாகிவிட்டதே” என நினைத்தது உண்டு.
விஜய் சேதுபதி: அரசியல் கருத்தும் சரி, கடவுள் நம்பிக்கையும் சரி நிறைய படங்களில் பேசியிருக்கிறீர்கள். ஆனால் அரசியலில் ஆர்வம் இருக்கிறது, வரப்போகிறேன் என்று… (கேள்வியை முடிப்பதற்குள்)
கமல்: அதைச் சொல்லாமல் இருப்பதுதான் நல்லது. தடுப்பதற்கு நிறையப் பேர் இருப்பார்கள். அது 2001-ல் புரிந்துவிட்டது. அரசியலுக்கு வந்துவிடுவேனோ என்ற சந்தேகத்தில் வைக்கப்பட்ட இடைஞ்சல்கள் கணக்கில் அடங்காது. அதை மீண்டும் சொல்லிக்காட்ட விரும்பவில்லை. ‘விருமாண்டி’ பிரச்சினை எல்லாம் திடீரென்று கிளப்பிவிடப்பட்டது தானே. நிதானமாகக் கோபப்பட வேண்டும் என்று புரிந்துகொண்ட நேரம் அது.
விஜய் சேதுபதி: அரசியல் வருகையை இவ்வளவு காலம் தள்ளிப்போட்டதற்கான காரணம் என்ன?
கமல்: அதற்கான சூழல். வயது வர வேண்டும். என்ன இவன் வந்துட்டானா என்று சொல்லக்கூடாது. இவர் என்று சொல்கிற வயது வரவேண்டும். அதற்காகக் காத்திருந்தேன். ஒருமையில் பேசுவது ரொம்ப சுலபம் அல்லவா.
இவ்வாறு கமல் பதிலளித்தார்.

Related posts