சென்னையில் பெண்களை விட ஆண்களுக்கே அதிக அளவு கொரோனா

சென்னையில் பெண்களை விட ஆணகளே அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

மத்திய சுகாதார அமைச்சக புள்ளி விவரங்களில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:-

கொரானாவால் நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் ஆயிரத்து 76 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையும் சேர்த்து நாட்டில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 439 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 77 பேர் வெளிநாட்டினர் ஆவார்கள் என மருத்துவ சிகிச்சையில் இதுவரை கொரோனாவில் இருந்து ஆயிரத்து 306 பேர் (1,306) குணமடைந்துள்ளதாகவும், மேலும் 9 ஆயிரத்து 756 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் அந்த புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்களின் பட்டியலில், மராட்டியம் முதலிடத்திலும், டெல்லி 2 ஆம் இடத்திலும், தமிழ்நாடு 3 ஆம் இடத்திலும் உள்ளன.

மராட்டிய மாநிலத்தில் கொரோனாவால் 2 ஆயிரத்து 687 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 178 பேர் பலியாகியுள்ளனர். டெல்லியில் ஆயிரத்து 561 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 30 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர் என கூறப்பட்டு உள்ளது.

சென்னையில் 30 முதல் 39 வயதுக்கு உட்பட்டோரே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

மாநகராட்சி வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களில், சென்னையில் இதுவரை 205 பேருக்கு கொரானா உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், அவர்களில் ராயபுரம் மண்டலத்தில் அதிகபட்சமாக 63 பேர் பாதித்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

கொரோனா பாதித்தோரில் ஆண்கள் 68.78 சதவீதம் பேர் என்றும், பெண்கள் 31.22 சதவீதம் பேர் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவால் 30 முதல் 39 வயது வரையிலான 44 பேரும், 50 முதல் 59 வயது வரையிலான 39 பேரும், 60 முதல் 69 வயது வரையிலான 21 பேரும், 70 முதல் 79 வயது வரையிலான 13 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளி விவரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts