யாரும் கவலைப்பட வேண்டாம்: அமித் ஷா உறுதி

லாக்டவுன் மே மாதம் 3 -ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்ததையடுத்து உணவுப்பொருள் கையிருப்பு, மருந்துகள் ஆகியவை பற்றி எழும் கவலைகளுக்குப் பதில் அளிக்கும் விதமாக உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி அளித்துள்ளார்.
பிரதமர் மோடியின் அறிவிப்புக்குப் பிறகு தொடர் ட்வீட்களில் அமித் ஷா கூறியிருப்பதாவது: நாட்டின் உள்துறை அமைச்சராக நான் நாட்டு மக்களுக்கு மீண்டும் உறுதி அளிப்பது என்னவெனில் நாட்டில் போதுமான உணவுப்பொருள் மற்றும் அத்தியாவசிய மருந்துகள் மற்றும் பிற பொருட்கள் கைவசம் உள்ளன. குடிமக்கள் இதைப்பற்றி கவலைப்பட வேண்டாம்.
வசதி படைத்தவர்கள் அவர்களுக்கு அருகில் வாழும் ஏழைகளுக்கு உதவ முன் வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
அனைத்துக் குடிமக்களும் லாக்-டவுன் நடைமுறைகளைக் கடைப்பிடிக்க நாம் ஒருங்கிணைந்த செயல்பாட்டைத் தீவிரப் படுத்த வேண்டும். எந்த ஒரு குடிமக்களுக்கும் அவர்களுக்குத் தேவையான பொருட்கள் பற்றாக்குறை இல்லாமல் பார்த்துக் கொள்வது அவசியம்.
மருத்துவர்கள், மருத்துவ உதவிப்பணியாளர்கள் இந்த நெருக்கடி கட்டத்தில் ஆற்றும் பணியானது ஒவ்வொரு இந்தியருக்கு அகத்தூண்டுதல் அளிப்பதாகும். அனைவரும் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி இவர்களுக்கு ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு கூறியுள்ளார் அமித் ஷா.ஏப்ரல் 20ம் தேதி பல்வேறு அளவுகோல்களின் அடிப்படையில் பொருளாதார நடவடிக்கைகளுக்காக லாக்-டவுன் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட வாய்ப்புள்ளது.

Related posts