அக்‌ஷய்குமார் மேலும் ரூ.3 கோடி உதவி

கொரோனா வைரஸ் பரவல் இந்தியாவை உலுக்கி வருகிறது.

கொரோனா வைரஸ் பரவல் இந்தியாவை உலுக்கி வருகிறது. இதனை கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கு பிறப்பித்து உள்ளனர். இதனால் தினக்கூலி தொழிலாளர்கள் வருமானம் இழந்துள்ளனர். பொருளாதார பாதிப்பும் ஏற்பட்டு உள்ளது. இதனை எதிர்கொள்ள மத்திய-மாநில அரசுகள் நிவாரண நிதி திரட்டி வருகின்றன. அனைத்து மொழி நடிகர்-நடிகைகளும் நிதி வழங்கி வருகிறார்கள்.

இந்தி நடிகர் அக்‌ஷய்குமார் ஏற்கனவே பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.25 கோடி வழங்கினார். இதற்காக சமூக வலைத்தளத்தில் பலரும் அவரை பாராட்டினர். தற்போது மும்பை மாநகராட்சிக்கும் ரூ.3 கோடி வழங்கி இருக்கிறார். மருத்துவர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள், முக கவசங்கள், கொரோனா பரிசோதனை கருவிகள் போன்றவற்றை தயார் செய்வதற்காக இந்த தொகையை அவர் வழங்கி உள்ளார்.

மேலும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், “நம் அனைவரையும் பாதுகாப்பாக வைத்திருக்க இரவு-பகலாக வேலை செய்துவரும் காவல்துறையினர், மாநகராட்சி ஊழியர்கள், டாக்டர்கள், செவிலியர்கள், தொண்டு அமைப்பினர், அரசு ஊழியர்கள் அனைவருக்கும் நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.

ஏற்கனவே ஊரடங்கில் வெளியில் சுற்றுபவர்களை கண்டித்த அக்‌ஷய்குமார் “இப்போதையை சூழ்நிலையில் வீட்டில் இருந்து தனது பாதுகாப்பையும், தனது குடும்பத்தினர் பாதுகாப்பையும் உறுதி செய்பவரே சூப்பர் ஸ்டார்” என்று கூறியிருந்தார்.

Related posts