தமிழ் புத்தாண்டில் மேலும் உதவிகளை அறிவிப்பேன்: நடிகர் லாரன்ஸ்

நடிகர் ராகவா லாரன்ஸ் ரூ.3 கோடி கொரோனா நிவாரண நிதி வழங்கிய நிலையில் தமிழ் புத்தாண்டில் மேலும் உதவிகளை அறிவிப்பேன் என்று கூறியுள்ளார்.

நடிகர் ராகவா லாரன்ஸ் ஏற்கனவே கொரோனா நிவாரண உதவி தொகையாக ரூ.3 கோடி வழங்கி இருந்தார். இந்த தொகை போதாது என்றும், மேலும் உதவிகள் வழங்க முடிவு செய்துள்ளேன் என்றும் அவர் அறிவித்துள்ளார். இதுகுறித்து முகநூல் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவுகளில் கூறியிருப்பதாவது:-

“நிவாரண நிதிக்கு நான் அளித்த நன்கொடைக்கு பிறகு ஸ்டன்ட் கலைஞர்கள், உதவி இயக்குனர்கள் மற்றும் பலர் இன்னும் உதவிகள் செய்யுமாறு என்னிடம் கேட்டுக்கொண்டார்கள். பொதுமக்களிடம் இருந்தும் கடிதங்கள், வீடியோக்கள் வந்துள்ளன.

அவற்றையெல்லாம் பார்க்கும்போது இதயமே நொறுங்கி விடும்போல இருந்தது. அவை அனைத்துக்கும் நான் தந்த ரூ.3 கோடி போதாது. பொதுமக்கள் அழுவது பற்றிய வீடியோக்கள் என்னை மிகவும் பாதித்தது. அனைத்து கோயில்களும் தற்போது மூடப்பட்டு உள்ளன. பாதிக்கப்பட்ட மக்களின் பசியில் கடவுள் இருக்கிறார் என்று நம்புகிறேன். கடவுள் எனக்கு சேவை செய்வதற்கான வேலையை கொடுத்து இருக்கிறார். சேவை செய்ய இதுதான் சரியான தருணம்.

எனவே மக்களுக்கும், அரசுக்கும் என்னால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என்று நினைத்துள்ளேன். இப்போது நான் கொடுத்துள்ள ரூ.3 கோடி இல்லாமல் மேலும் நான் என்ன செய்யபோகிறேன் என்பதை அறிவிக்க இருக்கிறேன். ஆடிட்டரிடம் கலந்து பேசி அடுத்த உதவிகள் குறித்து 14-ந்தேதி தமிழ் புத்தாண்டில் அறிவிப்பேன்.” இவ்வாறு லாரன்ஸ் கூறியுள்ளார்.

Related posts