இன்றைய முக்கிய இலங்கை செய்திகள் 02.04.2020

இலங்கையில் மேலும் இருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 148 அதிகரித்துள்ளது.
இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 27 பேர் பூரணகுணம் அடைந்துள்ளதுடன் மூவர் உயிரிழந்துள்ளனர்.

—–

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி நேற்றையதினம் (01) உயிரிழந்த நபருடன் தொடர்பைப் பேணி இருந்த சுமார் 300 பேர் புனாணை தனிமைப்படுத்தும் மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

—–

கொரோனா வைரஸ் தொடர்பில் பொய்யான தகவல்களை பரப்பிய பல்கலைக்கழக மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள மாணவர் ஏப்ரல் மாதம் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

—–

ஓய்வூதியும் பெறுவோரின் ஓய்வூதியத்தை அவர்களது வீடுகளுக்கே சென்று வழங்குவதற்கு தபால் திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன அரசாங்க தகவல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் நாலக கலுவேவ ஊடாக வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:

ஏப்ரல் மாதத்தில் தமது ஓய்வூதிய சம்பளத்தை பெற்றுக்கொள்ளும் ஓய்வூதிய சம்பள உரிமையாளர்களின் ஓய்வூதிய சம்பளத்தை அவர்களது வீட்டுக்கே கொண்டு சென்று ஒப்படைக்கும் வேலைத்தி;ட்டம் தற்பொழுது தபால் திணைக்களத்தின் பணியாளர்களினால் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன அவர்கள் தெரிவித்தார்.

இதற்கமைவாக ஓய்வூதிய சம்பளத்திற்கு உரித்தானவர்கள் அரசாங்கத்தினால் வழங்கப்படும் போக்குவரத்து வசதியை பயன்படுத்தி தபால் அலுவலகங்களிற்கு வர வேண்டிய அவசியம் இல்லை.

அத்தோடு ஏப்ரல் மாதம் 04 திகதியளவில் தமது ஓய்வூதிய சம்பளம் தமது வீட்டை வந்தடையாதோர் மாத்திரம் அது தொடர்பில் தமது ஓய்வூதிய சம்பளத்தை வழமையாக பெற்றுக் கொள்ளும் தபால் அலுவலகத்தின் தபால் அதிபரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பெற்றுத்தருமாறு கோருமாறு தபால் மா அதிபர் மேலும் அறிவித்துள்ளார்.

——

கொரோனா பரவலை தடுக்கும் வகையில், ஶ்ரீ லங்கன் விமான சேவையானது, ஏப்ரல் 08 முதல் 21ஆம் திகதி வரை தனது அனைத்து விமான பயண சேவைகளையம் தற்காலிகமாக இடைநிறுத்துவதாக அறிவித்துள்ளது.

அறிவித்தலொன்றை விடுத்துள்ள ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் இதனைத் தெரிவித்துள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

எமது சேவைகள் செயல்படும் இடங்களுக்கு விதிக்கப்பட்ட பயண கட்டுப்பாடுகளை கருத்தில் கொண்டு, 2020 ஏப்ரல் 08 முதல் 2020 ஏப்ரல் 21 வரை தனது அனைத்து விமானங்களையும் இடைநிறுத்தி வைக்க நிர்பந்திக்கப்பட்டுள்ளதோடு, இதனை பயணிகளுக்கு தெரிவிப்பதில் மிகவும் வருந்துகிறோம்.

எயார்லைன்ஸ் தொடர்ந்து விமானசேவை நிலைமைகள் மற்றும் பல்வேறு மட்டங்களாலும் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தொடர்ந்தும் மறுஆய்வு செய்து வருவதோடு, இதுபோன்ற கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டால் முன்னறிவித்தலுடன் எதிர்வரும் ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு முன்பே அதன் நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க தயாராக உள்ளது.

தேவைப்படுமானால், நாடு திரும்ப விரும்பும் இலங்கையர்களுக்காக இக்காலகட்டத்தில் விசேட விமானங்களை இயக்க விமான நிறுவனம் தயாராக உள்ளது.

Related posts