மட்டக்களப்பு மதனமோதகம் எனப்படும் கஞ்சா !

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட இருதயபுரம் மேற்கு பகுதியில் மதுவரித்திணைக்கள அதிகாரிகள் இன்று (29) காலை கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்றினை முற்றுகையிட்டதுடன் வீடு ஒன்றில் இருந்து ஆயிரக்கணக்கான மதனமோதகம் எனப்படும் கஞ்சா கலந்த அவின் உருளைகளையும் மீட்டுள்ளனர்.

ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் சட்ட விரோத போதைப்பொருள் பாவனை அதிகரித்துவருவதாக தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்ட மதுவரித் திணைக்களம் தொடர்ச்சியான சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.

இதன் கீழ் இன்று காலை மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட இருதயபுரம் மேற்கு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்று முற்றுகையிடப்பட்டது.

கசிப்பு உற்பத்தி மேற்கொண்டிருந்த போது அங்கு முற்றுகை மேற்கொள்ளப்பட்ட நிலையில் அது தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் குறித்த கசிப்பு உற்பத்தி நிலையத்தின் உரிமையாளர் தப்பிச் சென்றிருந்தார்.

இதன்போது அங்கு கைது செய்யப்பட்டவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் கசிப்பு உற்பத்தி நிலைய உரிமையாளரின் வீட்டில் மதுவரித்திணைக்களத்தினால் சோதனை நடாத்தப்பட்டது.

இதன்போது குறித்த உரிமையாளரின் வீட்டின் முன்பகுதி மற்றும் பின்பகுதிகளில் குழியொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 53 அவின் பக்கட்டுகள் மீட்கப்பட்டன.

குறித்த 53 அவின் பக்கட்டுகளில் அடைக்கப்பட்டிருந்த 1325 மதனமோதகம் எனப்படும் கஞ்சா கலந்த அவின் உருளைகள் மீட்கப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட மதுவரித்திணைக்களத்தின் பிரதான பரிசோதகர் எஸ்.ரஞ்சன் தெரிவித்தார்.

இது தொடர்பானவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் நாளை நீதிமன்றில் எடுக்கப்புடும் எனவும் அவர் தெரிவித்தார்.

Related posts