வாழ்ந்து காட்டுவோமா: ஆண்ட்ரியா

கரோனா சம்பவங்களை வரும் காலத்தில் குழந்தைகளுக்குக் கற்பனையாகச் சொல்வோமா அல்லது வாழ்ந்து காட்டுவோமா என்று கடிதமொன்றை ஆண்ட்ரியா தனது இன்ஸ்டாகிராம் பதிவில் வெளியிட்டுள்ளார்.

கரோனா வைரஸ் பரவும் வேகம் இந்தியாவில் அதிகரித்துள்ளது. இதுவரை கரோனா வைரஸுக்கு 900-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 20 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து கரோனா வைரஸ் பரவும் தீவிரத்தை அறிந்த பிரதமர் மோடி, 21 நாட்கள் ஊரடங்கிற்கு உத்தரவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து மக்கள், திரையுலக பிரபலங்கள் அனைவருமே வீட்டிற்குள் முடங்கிப் போயுள்ளனர்.

இதனிடையே பொதுமக்களையும் வீட்டிற்குள்ளேயே இருக்குமாறு திரையுலக பிரபலங்கள் வேண்டுகோள் விடுத்து வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார்கள். இது தொடர்பாக ஆண்ட்ரியா தனது இன்ஸ்டாகிராம் பதிவில் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

“ஒரு நாள் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த காலம் குறித்து நமது பேரக் குழந்தைகளிடம் சொல்லுவோம். நமது வேலைகள், வழக்கமான காலை நடைப்பயிற்சி, நீண்ட தூரப் பயணம், பிடித்த உணவகங்களில் உணவு, திருமணங்கள், பிறந்தநாள் விழாக்கள், வீட்டுக் கொண்டாட்டங்கள், சுற்றுலா மற்றும் நமது உயிர்கள் என அனைத்துக்கும் அச்சுறுத்தல் இருந்த காலம்.

இந்த பித்துப் பிடிக்கும் சூழலை நாம் எப்படிக் கையாண்டோம் என்பதே அவர்கள் கேட்க விரும்பும் கதையாக இருக்கும். இவ்வளவு குழப்பத்துக்கு நடுவில் தனிமையில், ஒற்றுமையாக நாம் நல்லறிவைத் தேர்ந்தெடுத்தோமா, பொறாமையை விடுத்து பச்சாதாபத்தைத் தேர்ந்தெடுத்தோமா, பேராசையை விடுத்து பெருந்தன்மையைத் தேர்ந்தெடுத்தோமா?

இப்போது நாம் இரண்டு விஷயங்கள் செய்யலாம். ஒன்று கற்பனையாக அதைச் சொல்லலாம் அல்லது வாழ்ந்து காட்டலாம்வீட்டிலிருந்தோம், சமூக ஊடகங்களால் சோர்வுற்றோம், சலித்துப் போய் படைப்பாற்றலோடு இருந்தோம், பால்கனிகளில் நின்று, வெளியே சேவை செய்து கொண்டிருப்பவர்களுக்காகப் பாடல் பாடினோம், கை தட்டினோம் என்று நாம் அவர்களுக்குச் சொல்லலாம்.

ஒரு புதிய நாளைப் பார்க்க நாம் உயிர் பிழைத்தோம். இந்தக் கதையைக் கெடுக்காதீர்கள். இவ்வாறு ஆண்ட்ரியா தெரிவித்துள்ளார்

Related posts