காலை நேர சிறிலங்கா செய்திகள் 28.03.2020

நேற்று (27) காலை 6.00 மணி முதல் இன்று (28) காலை 6.00 மணி வரையான காலப்பகுதியினுள் பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 1,167 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இக்காலப்பகுதியில் 260 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதற்கமைய கடந்த 20ஆம் திகதி மாலை 6.00 மணி முதல் இன்று (28) காலை 6.00 மணி வரையான காலப்பகுதியில் பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 5,185 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, 1,293 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் கடந்த 20ஆம் திகதி மாலை 6.00 மணியிலிருந்து நாட்டில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

——

வவுனியா, மயிலங்குளம் பிரதேசத்தில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு ஒன்றுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (27) மாலை இக்கைது இடம்பெற்றுள்ளது.

சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வவுனியா பொலிஸ் நிலைய அதிகாரிகள், மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவரை வழிமறித்துச் சோதனையிட்டனர். இதன்போதே வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டுடன் குறித்த சந்தேகநபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா, ஆசிக்குளம் பிரதேசத்தை சேர்ந்த 25 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சந்தேகநபர், ஏற்கெனவே பெண்கள் இருவருடைய தங்கச்சங்கிலி காணாமல் போன சம்பவத்துடன் தேடப்பட்டு வந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

——-

வவுனியா பம்பைமடு, வெலிக்கந்த, புனானை உள்ளிட்ட தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்து 309 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

இதேவேளை, வவுனியா பம்பைமடு இராணுவ முகாமில் அமைந்துள்ள கொரோனா தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து 167 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

கந்தக்காட்டில் 139 பேரும், தியத்தலாவையில் 03 பேரும் உள்ளிட்ட 309 பேர் இன்று (28) ஐந்தாம் கட்டமாக இவ்வாறு வீடு திரும்பியுள்ளனர்.

கொரோனோ வைரஸ் தாக்கம் நாட்டில் இனம்காணப்பட்டநிலையில் வெளிநாட்டிலிருந்து வருகைதரும் பயணிகள் 14 நாட்கள் தனிமைப்படுத்தி கண்காணிக்குட்டபடுத்தப்படுவார்கள் என அரசாங்கம் அறிவித்திருந்தது.

Related posts