சிகிச்சை பெற மறுப்பது;நோயைப் பரப்புவது சட்டப்படி கடும் குற்றம்

நாடளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள், நோய் அறிகுறிகளுடன் காணப்படுபவர்கள் மற்றும் நோய் தொற்றுக்கு உள்ளாகி நோயை பரப்ப முற்படுவது தொடர்பிலான தகவல்களை திரட்ட பொலிஸ் தலைமையகத்தில் விசேட வழிநடத்தல் பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவலை தடுப்பதற்காக பொலிஸாருக்கு கிடைக்கும் தகவல்கள் அனைத்தும் இந்தப் பிரிவின் ஊடாகவே வழிநடத்தப்படும் என்பதுடன், தகவல்களை வழங்க ஐந்து விசேட தொலைபேசி இலக்கங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

நாட்டில் உள்ள அனைத்துப் பொலிஸ் நிலையங்களிலும் ஏழு பேர் கொண்ட விசேட குழுவொன்று இதற்காக ஸ்தாபிக்கப்பட்டுள்ளதுடன், பிரதேச சுகாதார பரிசோதகரின் உதவியுடன் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் சந்தேகிக்கப்படுவர்களுக்கான சுகாதார நடவடிக்கைகளை எடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சிகிச்சை பெற மறுப்பது, நோய் அறிகுறிகளுடன் மக்கள் மத்தியில் நடமாடல் அல்லது நோய் தொற்றுக்குள்ளானர்கள் ஏனையவர்களுக்கு நோயை பரப்புவது என்பன சட்டப்படி குற்றமாகும். இவர்களுக்கு எதிராக ஆறுமாதம் அல்லது இரண்டுவருட சிறை தண்டனையை வழங்கவும் முடியுமென பொலிஸ் தலைமையகம் அறிவித்தது.

கொழும்பில் அமைந்துள்ள பொலிஸ் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே சட்டம் மற்றும் ஒழுக்காற்று பிரிவுகளுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

நாட்டில் சட்டத்தை அறிமுகப்படுத்தும் பிரதான நிறுவனம் பொலிஸ் திணைக்களமாகும். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சர்வதேச ரீதியில் அச்சுறுத்தலான நிலை காணப்படுகிறது. கொரோனா வைரஸ் இலங்கையில் பரவுவதை கட்டுப்பத்துவதற்கு பொலிஸ் திணைக்களம் சில முக்கியமான தீர்மானங்களை இன்றுமுதல் அமுல்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் தொடர்பிலான நடவடிக்கைகளை எடுப்பதற்காக பொலிஸ் தலைமையகத்தில் விசேட வழிநடத்தல் பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இப்பிரிவுக்கு பொது மக்கள் கொரோனா நோய் தொடர்பிலான அனைத்து தகவல்களையும் வழங்க முடியும். அதற்கான 5 விசேட இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 011-2444480, 011-2444481, 0115978730, 0115978734, 0115978720 ஆகிய இலக்கங்களுக்கும் lahd@police.lk என்ற ஈமெயிலுக்கும் பொது மக்கள் தகவல்களை வழங்க முடியும். இதற்கு மேலதிகமாக 119 என்ற பொலிஸ் திணைக்களத்தின் இலக்கத்திற்கும் அழைத்து தகவல்களை வழங்கவும் முடியும்.

சகோதரர்கள், உறவினர்கள், அயலவர்கள், வெளிநாட்டிலிலிருந்து வந்தவர்கள் அல்லது பிரதேசத்தில் எவருக்கும் கொரோனா தொற்றுத் தொடர்பிலான அறிகுறிகள் காணப்பட்டால் தகவல்களை வழங்க முடியும். அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான நடவடிக்கைகள் நாட்டில் உள்ள 699 பொலிஸ் நிலையங்கள் ஊடாக முன்னெடுக்கப்படும். அதற்காக அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் 7 பேர் கொண்ட பொலிஸ் குழுவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. சுகாதார திணைக்களத்துடன் இணைந்த பிரதேச சுகாதார பரிசோதகர் ஊடாக இவர்களுக்கு சிகிச்சை வழங்கும் செயற்பாடு இடம்பெறவுள்ளது.

நோய் தொற்றுக்கு உள்ளான ஒருவர் அல்லது நோய் தொடர்பிலான அறிகுறிகளுடன் காணப்படும் நபர்கள் சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ளாது பொது மக்கள் மத்தியில் நடமாடுவது நோயாளரை தனிமைப்படுத்தல் சட்டம் அல்லது தண்டனைச் சட்டக்கோகையின் 262,263,264ஆம் சரத்துகளின் பிரகாம் தண்டனைக்குரிய குற்றமாகும். இவர்களுக்கு எதிராக ஆறுமாதகாலம்வரை சிறை தண்டனை விதிக்க முடியும் என்பதுடன், கைது உத்தரவுகளின்றி கைதுசெய்யவும் முடியும்.

நோயை ஏனையவர்களும் பரப்ப முற்படுவதும் பாரிய தண்டனைக்குரிய குற்றமாகும். இவர்களுக்கு எதிராக இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையை விதிக்க முடியும்.

இதேவேளை, சமூக வலையத்தளங்களில் போலியான அல்லது உண்மைக்குப் புறம்பான தகவல்களை பரப்புபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுக்க உள்ளோம். தற்போது இவ்வாறு தகவல்களை பரப்பியுள்ள 23 பேர் தொடர்பில் கண்காணிப்புகளை மேற்கொண்டுள்ளோம்.

தண்டனை சட்டக் கோவையின் 120ஆவது பிரிவு மற்றும் பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுக்க முடியும். மக்களை குழப்ப நிலைக்கு உள்ளாக்கும் வகையில் செய்திகளை பரப்புபவர்கள் தொடர்பிலான தகவல்களையும் மேற்கூறப்பட்ட விசேட இலக்கங்களுக்கு தெரியப்படுத்துமாறும் கேட்டுக்கொள்கின்றோம் என்றார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Related posts