ரசிகர்களுக்கு தடை? மாஸ்டர் பட விழாவுக்கு கட்டுப்பாடுகள்

மாஸ்டர் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை வருகிற 15-ந்தேதி நடத்த முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

மாநகரம், கைதி படங்களை எடுத்து பிரபலமான லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் படத்தில் விஜய் நடித்து முடித்துள்ளார். படம் அடுத்த மாதம் 9-ந்தேதி திரைக்கு வருகிறது. கதாநாயகியாக மாளவிகா மோகனனும், வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர். சாந்தனு, அர்ஜுன் தாஸ், ஆண்ட்ரியா ஆகியோரும் உள்ளனர்.

மாஸ்டர் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை வருகிற 15-ந்தேதி, பிரபலங்கள், படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட 500 பேரை மட்டுமே அழைத்து நட்சத்திர ஓட்டலில் நடத்த முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. முந்தைய சர்கார் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் 10 ஆயிரம் ரசிகர்களை அழைத்து நடத்தினார்கள்.

பிகில் பாடல் விழா தாம்பரம் அருகே உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் நடந்தது. இதில் சுமார் 4 ஆயிரம் ரசிகர்கள் கலந்து கொண்டனர். ஆனால் மாஸ்டர் பட விழாவை ரசிகர்களை அழைக்காமல் எளிமையாக நடத்த முடிவு செய்துள்ளனர். இந்த விழா தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும் என்று அறிவித்துள்ளனர். பிகில் பட பாடல் விழாவில் மோதல் ஏற்பட்டு போலீசார் லேசான தடியடி நடத்திய சம்பவம், சமீபத்தில் நடந்த வருமான வரி சோதனை, போலீசார் மற்றும் அரசிடம் அனுமதி பெறுவதில் உள்ள சிரமங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களை மனதில் வைத்து விழாவை நட்சத்திர ஓட்டலில் நடத்துவதாக கூறப்படுகிறது.

Related posts