முறையான தேசிய கல்வி கொள்கை உடனடியாக உருவாக்குவது அவசியம்

கால மாற்றங்களுக்கு பொருத்தமான வகையில் முறையான கல்விக்காக தேசிய கொள்கையொன்றை உடனடியாக உருவாக்க வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்தார்.

அரசாங்கம் மாறும்போது மாற்றம் அடையாத நாட்டின் எதிர்கால சந்ததியினருக்காக உருவாக்கப்படும் கல்வி முறைமையாக அமைய வேண்டுமெனக் குறிப்பிட்டார்.

கல்வி அமைச்சின் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக (05) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“கல்விக் கொள்கை” உருவாக்கும்போது துறைசார் வல்லுனர்களின் ஆலோசனைகளோடு சர்வதேச முறைமைகளை கவனத்திற்கொண்டு அது உருவாக்கப்படல் வேண்டும். அரசியல்வாதிகளின் செய்திகள், புகைப்படங்களை பாடசாலை பாடப் புத்தகத்திலிருந்து நீக்குவதற்கு கல்வி அமைச்சரினால் எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தை ஜனாதிபதி பாராட்டினார்.

“நெனச” கணனி தொழிநுட்ப வேலைத்திட்டம் கடந்த காலங்களில் பின்னடைவைக் கண்டது. அதை புதுப்பித்து வினைத்திறனான வகையில் முன்கொண்டு செல்லுமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.

பத்து, பதினொராம் தரங்களில் கணனி தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி சில பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. அதன் உயர் பலனை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் குறைந்தது 06ஆம் தரத்திலிருந்து கணனி தொழிநுட்ப அறிவை பெற்றுக்கொடுக்க வேண்டும்.

கிராமிய பிரதேசங்களில் நிலவுகின்ற ஆங்கிலம், கணிதம் மற்றும் விஞ்ஞான ஆசிரியர்களின் பற்றாக்குறைக்கான தீர்வாக கணனி தொழிநுட்பத்தை பயன்படுத்திக்கொள்ள முடியுமெனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். முறையான திட்டமிடல் மூலம் நகரங்களில் பிள்ளைகளுக்கு கிடைக்கக்கூடிய அறிவை கிராமிய பிள்ளைகளுக்கும் பெற்றுக்கொடுக்க முடியும். இதற்காக கிராமிய பாடசாலைகளுக்கு அவசியமான தொழிநுட்ப உபகரணங்கள், அதிவேக இணைய வசதிகளை அரச மற்றும் தனியார் தொடர்பாடல் நிறுவனங்களுடன் இணைந்து வழங்குவதற்கான வாய்ப்புக்களைப் பற்றியும் ஜனாதிபதி தனது கவனத்தை செலுத்தினார்.

முன்பள்ளி தொடக்கம் பல்கலைக்கழகம் வரையிலான பரீட்சையை அடிப்படையாகக் கொண்ட கல்வி முறையை மாற்றியமைத்து உலகை வெற்றி கொள்ளக்கூடியதும் நடைமுறைக்கேற்றதுமான பொறிமுறையொன்றை அறிமுகப்படுத்த வேண்டும்.

—–

குவைத் அரசாங்கம் இன்று (07) முதல் ஒருவார காலத்திற்கு இலங்கை உள்ளிட்ட 07நாடுகளுக்கான விமான சேவையை தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்க தீர்மானித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவி வருவதைக் கவனத்திற்கொண்டு குவைத் அரசாங்கத்தினால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எகிப்து, பிலிப்பைன்ஸ், சிரியா, லெபனான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கே விமான சேவையை குவைத் அரசாங்கம் இடைநிறுத்தி வைத்துள்ளது.

அத்தோடு இலங்கை உட்பட ஏனைய நாடுகளில் இரண்டு வாரங்களுக்கும் மேலாக தங்கியிருக்கும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் குவைத்திற்குள் நுழைவதற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் குறித்த நாடுகளிலிருந்து வரும் குவைத் நாட்டைச் சேர்ந்தவர்கள் இரண்டு வாரங்களுக்கு தனிமைப்படுத்தி வைக்கப்பட்டு நாட்டில் அனுமதிக்கப்படுவார்கள் என்று அந்நாட்டு அதிகாரியொருவர் தெரிவித்தார்.

குவைத்தில் 58பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளதாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் எதிர்வரும் 10ஆம் திகதி முதல் ஏப்ரல் 30ஆம் திகதி வரையில் சீனாவுக்கான விமானங்களையும், மார்ச் 15 முதல் ஏப்ரல் 30 வரையில் சவூதி அரேபியாவின் ஜித்தாவுக்கான விமானங்களையும் இடைநிறுத்துவதாக நேற்றைய தினம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

—–

இலங்கையில் பதிவு செய்யப்பட்ட சர்வதேச ஆழ்கடல் மீன்பிடிப் படகுகளின் செயற்பாடுகளால் ஏற்படும் பாதிப்புக்களை தடுப்பது தொடர்பாக ஆராய்வதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விசேட குழு ஒன்றை அமைப்பதற்குத் தீர்மானித்துள்ளார்.

இந்தக் குழுவில் அமைச்சின் செயலாளர் திருமதி இந்து ரத்னாயக்கா மற்றும் சர்வதேச கடலில் மீன்பிடித்தலில் ஈடுபடும் உள்ளூர் ஆழ்கடல் படகுகளின் உரிமையாளர்கள் இருவர், துறைசார் நிபுணர்களும் உள்ளடக்கப்பட்டுள்ளனர். சர்வதேச கடலில் மீன்பிடியில் ஈடுபடும் உள்ளூர் ஆழ்கடல் வள்ளங்களுக்கு வி.எம்.எஸ். முறைமை மற்றும் குளிரூட்டல் வசதி போன்றவை பொருத்தப்படும் வரையான தற்காலிக அனுமதிப் பத்திரங்களை உடனடியாக வழங்குமாறு அமைச்சு அதிகாரிகளுக்கு அமைச்சர் ஆலோசனையும் வழங்கியுள்ளார்.

இலங்கையில் பதிவு செய்யப்பட்ட சர்வதேச மீன்பிடி ஆழ்கடல் படகுகளின் செயற்பாடுகளால் தொழில்துறை பாதிக்கப்படுவதாக, அகில இலங்கை ஆழ்கடல் வள்ளங்களின் உரிமையாளர்கள் அண்மையில் ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்தனர். இந்நிலையில் சம்பந்தப்பட்ட தரப்பினரைச் சந்தித்து (04) அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தினார். பதிவு செய்யப்பட்ட சர்வதேச மீன்பிடி ஆழ்கடல் வள்ளங்களில் இலங்கைக்கு மீன்களை கொண்டுவரும் போது இடம்பெறும் முறைகேடுகள் கட்டுப்படுத்த வேண்டும். தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ள சர்வதேசத்தில் உற்பத்தி செய்யப்பட்ட 35மீன்பிடிப் படகுகளின் அனுமதியை மீண்டும் புதுப்பித்து கொடுக்கக் கூடாது போன்ற கோரிக்கைகளை மீனவர்களின் பிரதிநிதிகள் முன்வைத்தனர். இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர்,

அமைக்கப்பட்டுள்ள குழுவின் ஊடாக இரண்டு வார காலப் பகுதிக்குள் இலங்கை கடற்றொழிலாளர்கள் திருப்தியடையும் வகையில் தீர்வு காணமுடியும் எனத் தெரிவித்தார்.இவற்றுக்கான அனுமதிகளை கடந்த அரசாங்கமே வழங்கியதாகவும் குறிப்பிட்டார்.

Related posts