‘சூரரைப் போற்று’ வெளியீட்டுத் தேதியில் மாற்றம்?

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘சூரரைப் போற்று’ படத்தின் வெளியீட்டுத் தேதியில் மாற்றம் இருக்கும் எனத் தெரிகிறது.
சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சூரரைப் போற்று’.

இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. சூர்யாவின் 2டி நிறுவனமும், குனீத் மோங்காவும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர். சக்தி பிலிம் பேக்டரி வெளியிடவுள்ளது.

இந்தப் படத்தை முதலில் ஏப்ரல் 9-ம் தேதி வெளியிட முடிவு செய்தனர். ஆனால், படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் திட்டமிட்டபடி முடிவடையாத நிலை, ‘மாஸ்டர்’ படத்துடன் போட்டி, விடுமுறை தினங்கள் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு தற்போது வெளியீட்டை மாற்றியிருப்பதாகத் தெரிகிறது.

தற்போதுள்ள நிலவரப்படி ஏப்ரல் 30-ம் தேதி வெளியிடலாம் எனத் திட்டமிட்டுள்ளனர். விரைவில் சூர்யா, 2டி நிர்வாகத் தயாரிப்பாளர் ராஜா, சக்திவேலன் ஆகியோர் இணைந்து பேசி இந்தத் தேதியை இறுதி செய்யவுள்ளனர்.

சமீபத்தில் வெளியிடப்பட்ட டீஸர், பாடல் ஆகியவற்றுக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும், 2-வது பாடல் வெளியீட்டுக்கு படக்குழு திட்டமிட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து இசை வெளியீட்டு விழா, ட்ரெய்லர் என படத்தை விளம்பரப்படுத்தவும் தீவிரமாகி வருகிறது படக்குழு.

இந்தப் படத்தில் அபர்ணா பாலமுரளி, மோகன் பாபு, ஜாக்கி ஷெராஃப், கருணாஸ் உள்ளிட்ட பலர் சூர்யாவுடன் நடித்துள்ளனர். நிகித் பொம்மி ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இந்தியாவில் முதல் பட்ஜெட் விமானப் பயணத்தை உருவாக்கியவர் ஜி.ஆர்.கோபிநாத். அவருடைய வாழ்க்கையைத் தழுவியே இந்தப் படத்தின் கதையை உருவாக்கியுள்ளார் இயக்குநர் சுதா கொங்கரா.

Related posts