அலைகள் வாராந்த பழமொழிகள் 05.03.2020

01. உள்ளத்தின் தோற்றம் மட்டுமல்ல உங்கள் வெளித்தோற்றமும் முக்கியமானது. உங்களைப்பற்றிய நேர்மையான விடயங்களை பேசுங்கள். நீங்கள் எப்படி இருக்க வேண்டுமோ அப்படிப்பட்டவர் போல உங்கள் தோற்றம் இருப்பதை உறுதி செய்யுங்கள் இவை இரண்டும் மிக முக்கியம்.

02. ஒரு மோசமான சிறுவனை அவனுடைய தோற்றத்தை வைத்து கண்டு பிடித்துவிடலாம் என்று ஒரு காவல் துறை அதிகாரி கூறுகிறார்.

03. இளைஞர்கள் அவர்களுடைய புறத்தோற்றத்தை வைத்தே எடை போடப்படுகின்றனர். அவ்வாறு ஒருவனுக்கு முத்திரை குத்தப்படுமானால் பின்பு அதை மாற்றுவது கடினம்.

04. உங்கள் தோற்றம் சீராகவும் நேர்த்தியாகவும் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். உங்களுடைய உற்சாகத்தையும் தன்னம்பிக்கையையும் வளர்க்க அது மிக அவசியம்.

05. நீங்கள் பரீட்சை எழுத போகும்போது சீராகவும் நேர்த்தியாகவும் உடையணிந்து போக வேண்டும். ஏனென்றால் சீராக சிந்திப்பதற்கு அது அவசியமாகும்.

06. உங்கள் புறத்தோற்றம் உங்கள் அகத் தோற்றத்தின் மீது பாதிப்பை ஏற்படுத்துகிறது. உதாரணமாக ஒரு இராணுவ வீரன் சீருடைய அணியும்போது ஒரு வீரனாக தன்னை எண்ணுகிறான்.

07. ஒருவர் செழிப்பானவர் போல தோன்றாவிட்டால் ஒரு போதும் செழிப்பானவராக உணர முடியாது. பெரிய அளவில் விற்பனையாக வேண்டும் என்றால் செழிப்பான தோற்றம் அவசியம்.

08. ஒரு காலமும் ஆடையை பார்க்கக் கூடாது அறிவைத்தான் பார்க்க வேண்டும் என்பது கேட்க காதுகளுக்கு இனிப்பாகவே இருக்கும், ஆனால் யதார்த்தம் வேறுவிதமாகவே இருக்கும். முதல் மதிப்பீடு உங்கள் புறத்தோற்றத்தாலேயே உருவாகிறது.

09. அரைக்கிலோ திராட்சை ஐம்பது ரூபா ஆனால் அதே அரைக்கிலோ பாக்கட்டில் போட்டதால் 100 ரூபா என்று ஒரு சிறுவன் கூறினான். விலை வித்தியாசத்தை அலங்காரமே தீர்மானிக்கிறது.

10. மக்கள் ஒரு நபரை பார்த்தவுடன் தங்கள் மனதிற்குள் அவரை மதிப்பிட்டுவிட்டு, பின் அதற்கு ஏற்றாற்போலவே அவரை நடத்துகிறார்கள்.

11. ஏனோ தானோ என்று உடையணிந்திருக்கும் ஒருவருடைய தோற்றம் எதிர்மறையான விடயங்களையே கூறுகிறது. இவர் ஒரு நல்ல வாழ்க்கையை வாழவில்லை என்ற செய்தியை அது தெரிவிக்கிறது. இவர் கவனக்குறைவுடையவர், செயற்திறன் அற்றவர் என்ற எண்ணத்தை அது உருவாக்குகிறது.

12. நீங்கள் வாங்கும் ஆடைகளின் எண்ணிக்கையை குறையுங்கள், பதிலுக்கு வாங்கும் ஆடையை அதிக விலைக்கு வாங்குங்கள் அதனால் பணம் இல்லையே என்ற பிரச்சனை தீர்ந்துவிடும்.

13. அதிக விலை கொடுத்து வாங்கும்போது உங்கள் துணிகள் அதிக தரம் வாய்ந்தவையாக இருக்கின்றன. அவற்றுக்கு மவுசு அதிகம்.

14. நீங்கள் உங்களை எப்படிப்பட்டவராக சிந்திக்கிறீர்களோ நீங்கள் அப்படிப்பட்டவராகவே இருக்கிறீர்கள். நீங்கள் தாழ்ந்தவர் என்ற நினைப்பை உங்கள் தோற்றம் ஏற்படுத்தினால் நீங்கள் தாழ்ந்தவராகவே இருப்பீர்கள்.

15. ஒருவர் வேலையில் உயர்வது அவருடைய சிந்தனையின் அளவைப்பொறுத்ததாகும். உயர்ந்த கற்பனை இல்லாமல் சம்பளத்திற்கு உழைத்து காணப்போவது உயர்வாக இருக்காது.

16. ஒருவர் தன் வேலையைப்பற்றி என்ன நினைக்கிறார் என்பது அவரைப்பற்றிய ஏராளம் விடயங்களை அறிய துணையாகிறது. ஒரு பெரிய பொறுப்பை வகிக்கக் கூடிய ஆற்றல் அவருக்கு இருக்கிறதா என்பதையும் அது எடுத்துரைக்கிறது.

17. ஒருவர் தன் வேலையை செய்யும் விதத்திற்கும் அதன் மீது கொண்டிருக்கும் மதிப்பிற்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருக்கிறது. இந்த வேலையை பெருமையுடன் போற்றினாலே அடுத்த வேலையை பெருமையுடன் போற்றுவர்.

18. உங்கள் வேலை குறித்து நீங்கள் எப்படி சிந்திக்கிறீர்கள் என்பது உங்களைப்பற்றிய ஏராளமான தகவல்களை மற்றவர்களுக்கு வழங்குகிறது.

19. நீங்கள் யாராக உருவாக உங்கள் சிந்தனை வழி நடத்துகிறதோ அதுதான் நீங்கள்.

20. நீங்கள் விரும்பியதை பெறுவதற்கான முக்கிய வழி நீங்கள் உங்களைப்பற்றி நேர்மறையாக சிந்திப்பதிலேயே இருக்கிறது.

21. சிந்தனைகளை புதுப்பிக்க தெரியாதவர்கள் தொடர்ந்து ஒரேயிடத்திலேயே இருப்பார்கள்.

22. எந்த ஒரு பணியையும் முக்கியமாக கருதாத ஒருவரை வேலையில் வைத்திருந்து பயன் எதுவும் கிடையாது.

23. தன்வேலையை முக்கியமானது என்று நினைக்கும் ஒருவருக்கே அதை சிறப்பாக செய்வதற்கான மன சமிக்ஞைகள் கிடைக்கின்றன.

24. மேலதிகாரியை பார்த்தே அவரின் கீழே பணியாற்றுகிறவர்கள் செயற்படுவர். குழந்தை தன் பெற்றோரைப் பார்த்து நடப்பதைப் போல.

25. நீங்கள் உற்சாகத்துடன் இருந்தால்தான் உங்களிடம் பொருட்களை வாங்க வருவோர் உற்சாகமாக இருப்பார்கள்.

அலைகள் பழமொழிகள் 05.03.2020

தொடர்ந்தும் வரும்..

Related posts