ஐ.நா தீர்மானங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் சுமந்திரன் !

ஐ.நா பரிந்துரைகள் மற்றும் தீர்மானத்திலிருந்து இலங்கை விலகினாலும், எடுக்கப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்த ஐ.நா வலியுறுத்த வேண்டும் என தமிழரசு கட்சி மத்திய குழு கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் நேற்று (23) எடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த ஊடக சந்திப்பு நேற்று மாலை 6.30 மணி அளவில் கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் இடம்பெற்றது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மத்திய குழு கூட்டம் கிளிநொச்சி தமிழரசு கட்சி அலுவலகத்தி இடம்பெற்றது. குறித்த கூட்டத்தில் ஆராயப்பட்ட விடயங்கள் தொடர்பில் ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை ஆரம்பமாகவுள்ள நிலையில் இலங்கை அரசு ஐ.நா தீர்மானங்களிலிருந்து வெளியுறுவது தொடர்பில் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இந்த நிலையில் எதிர்வரும் 26 ஆம் திகதி இலங்கைக்கான நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஒதுக்கப்பட்ட நேரத்தில் இலங்கை அரசின் சார்பில் செல்லும் தினேஷ் குணவர்த்தன குறித்த தீர்மானங்களிலிருந்து விலகுவதாக அறிவிக்க உள்ளார்.

இலங்கை குறித்த தீர்மானங்களிலிருந்து விலகும் என்பது ஏற்கனவே அறிந்த ஒன்றாகும். ஆட்சி மாற்றத்தின் பின்னர் அவர்களின் செயற்பாடுகள் தொடர்பில் நாம் அவதானித்த வருகின்றோம். இந்த நிலையில் மனித உரிமைகள் பேரவையினால் எடுக்கப்பட்ட தீர்மானங்களிலிருந்து இலங்கை வெளியேறும் நிலையில் எவ்வாறான விடயங்களை முன்வைப்பது என்பது தொடர்பில் மத்திய குழு கூட்டத்தில் இன்று முடிவினை ஏகமனதாக எடுத்திருந்தோம்.

ஐ.நா மதிய உரிமை பேரவையினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தினை இலங்கை அரசு மீறுகின்றமையை தமிழரசு கட்சி வன்மையாக கண்டிக்கின்றது. அதேவேளை இலங்கை குறித்த தீர்மானங்களைிலிருந்து விலகினாலும், மனித உரிமைகள் பேரவையினால் ஏற்கனவே எடுக்கப்பட்ட தீர்மானங்களை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும், அது தவிர்ந்து வேறு வழிகளையும் கையாள வேண்டும் எனவும் கோருவதான தீர்மானத்தினை நாம் எடுத்துள்ளோம்.

இன்று தமிழரசுக் கட்சியினால் எடுக்கப்பட்ட தீர்மானமாக மாத்திரமல்லாது, பங்காளி கட்சிகளிடமும் குறித்த தீர்மானத்தை தெரியப்படுத்தியதாகவும், அவர்களும் அதனை ஏற்றுள்ளதாகவும் சுமந்திரன் இதன்போது தெரிவித்தார்.

இதேவேளை, பாராளுமன்றம் கலைக்கப்படாத நிலையில் எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் ஆரம்ப கட்ட தீர்மானங்கள் சிலவற்றை நாங்கள் எடுத்துள்ளோம். அந்த வகையில் சில இணக்கப்பாடுகள் இன்றைய தினம் எடுக்கப்பட்டுள்ளன. இன்று எடுக்கப்பட்ட முடிவுகள் முழுமையானது அல்ல. இது தொடர்பில் தொடர்ந்தும் அவதானம் செலுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் இரா. சம்பந்தன் போட்டியிடுவாரா அல்லது தேசியப் பட்டியல் ஊடாக பிரதிநிதித்துவம் செய்யப்படுவாரா என வினவியபோது? இன்றைய நிலை வரைக்கும் அவர் தேர்தலில் போட்டியிடுகின்ற சூழலே காணப்படுகின்றது என தெரிவித்தார்.

இத் தேர்தலில் பெண்கள், புது முகங்களிற்கு அதிகம் முன்னுரிமை வழங்கப்படுமா என அவரிடம் வினவிய போது, இம்முறை தேர்தலில் படித்த இளம் முகங்களிற்கான சந்தர்ப்பங்களை வழங்குவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டடுள்ளதாகவும், எனினும் தீர்மானம் முழுமையாக எடுக்கப்படவில்லை எனவும் தெரிவித்த அவர், இவ்விடயம் தொடர்பில் அதிகம் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை, பெண் உறுப்பினர்களை மாவட்டம் தோறும் ஒருவரையாகிலும் வெற்றிபெற வைக்க வேண்டும் என்பது கடந்த தேர்தல்களிலும் நாம் எடுத்த முயற்சியாகும். இம்முறையும் அவ்வாறான நிலையே காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

-கிளிநொச்சி நிருபர் நிபோஜன்-

Related posts