105 வயதிலும் படிப்பை தொடர்ந்த மூதாட்டி

105 வயதிலும் படிப்பை தொடர்ந்த மூதாட்டிக்கு எனது வணக்கங்கள் என ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி கூறியுள்ளார்.

பிரதமர் மோடி ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையன்று காலை 11 மணிக்கு வானொலி மூலம் ‘மன் கி பாத்’ என்ற நிகழ்ச்சியின் மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். கடந்த 2014ம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் கடைப்பிடிக்கப்பட்டு வரும் இந்த நடைமுறை 2வது முறையாக பா.ஜ.க. ஆட்சியேற்ற பின்னரும் தொடர்ந்து வருகிறது.

இந்நிகழ்ச்சியில், நாட்டில் நிலவும் பிரச்சினைகள், அரசின் முடிவுகள், மேற்கொள்ளவேண்டிய திட்டங்கள் என பல்வேறு அம்சங்கள் குறித்து பிரதமர் பேசி வருகிறார். இதேபோன்று மத்திய அரசு செயல்படுத்தி வரும் சிறப்பு திட்டங்களால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள நன்மை குறித்தும் அவர் பேசி வருகிறார்.

அதன்படி, இந்த மாதத்திற்கான கடைசி ஞாயிற்று கிழமையான இன்று வானொலியில் ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

பிரதமர் மோடி பேசும்பொழுது, கேரளாவின் கொல்லம் நகரில் வசித்து வரும் பாகீரதி அம்மா தனது 10 வயதில் பள்ளி படிப்பை கைவிட வேண்டிய சூழல் ஏற்பட்டது.

ஆனால் தனது 105வது வயதிலும் படிப்பை தொடர்ந்து தேர்வில் 75 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளார். தூண்டுதலாக செயல்பட்ட அவருக்கு எனது வணக்கங்களை செலுத்தி கொள்கிறேன் என கூறினார்.

இதேபோன்று உத்தர பிரதேசத்தின் மொராதாபாத் நகரில் ஹாமீர்பூர் கிராமத்தில் வசித்து வருபவர் சல்மான். பிறவியிலேயே மாற்று திறனாளியான இவர் காலணிகள் மற்றும் சலவை தூள் ஆகியவற்றை தயாரித்து வருகிறார்.

அவர் தன்னை போல் 30 மாற்று திறனாளிகளுக்கு பயிற்சி அளித்து, வேலையும் அளித்துள்ளார். இந்த வருடம் கூடுதலாக 100 பேருக்கு வேலை வழங்குவது என சல்மான் தீர்மானித்து உள்ளார். அவர்கள் இருவருடைய தைரியம் மற்றும் தொழில் முனையும் திறனுக்கு எனது வணக்கங்கள் என்று கூறியுள்ளார்.

Related posts