பாலியல் வல்லுறவு புரிந்த வைத்தியர் ஒருவருக்கு எதிராக பிடியாணை

சிகிச்சைக்கு சென்ற பெண் நோயாளர் ஒருவரை பாலியல் வல்லுறவு புரிந்த வைத்தியர் ஒருவருக்கு எதிராக நேற்று (12) திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் பிடியாணை உத்தரவை பிறப்பித்துள்ளார்.

திருகோணமலை கந்தளாயில் 2012 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஆயுர் வேத சிகிச்சை நிலையத்தில் சிகிச்சைக்கு சென்ற பெண் நோயாளி ஒருவர் மீது பாலியல் வல்லுறவு புரிந்ததாக ஆயுர்வேத மருத்துவர் மொஹமட் அபுதாஸிஸ் மொஹமட் வாகித் என்ற ஆயுர் வேத வைத்தியரும் பாலியல் வல்லுறவுக்கு உதவியாகவும் உடந்தையாகவும் இருந்ததாக வைத்தியரின் உதவியாளராக கடமையாற்றிய சிங்கள பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டு திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பெண் ஒரு சிங்களப் பெண் ஆவார்.

சிகிச்சையின் போது தனக்கு ஒரு திரவம் அருந்த கொடுக்கப்பட்டதாகவும் அதன் பின்னர் போதை நிலை அல்லது மயக்க நிலையில் மருத்துவர் பலாத்காரம் செய்ததாகவும் அந்த பெண் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

குறித்த நோயாளியின் சத்தம் கேட்டு வெளியில் காத்திருந்த அவரது சகோதரியும் மகனும் உள்ளே சென்று பார்த்தபோது வைத்தியரின் குற்றச் செயற்பாட்டை அவதானித்ததாக பாதிக்கப்பட்டவரின் சகோதரி நீதிமன்றத்தில் சாட்சியம் வழங்கியுள்ளார்.

வழக்கு ஆரம்பிக்கப்பட்டு முடிவுறும் வரையில் ஆயுர்வேத வைத்தியர் நீதிமன்றத்தில் முன்னிலையாகி வந்தார்.

இந்த நிலையில் 2020 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 05 ஆம் திகதியன்று தீர்ப்பு வழங்கப்படும் என நீதிமன்றம் அறிவித்தது.

எனினும் அன்றைய தினம் அவர் தீர்ப்புக்கு முன்னிலையாகாது தலைமறைவாகியுள்ளார்.

அதன் பின்னர் நேற்று (12) தீர்ப்பு வழங்கப்படும் என நீதிமன்றம் அறிவித்திருந்த நிலையில் தற்போது குறித்த வைத்தியரை கைது செய்ய அவரது சொந்த ஊரான குருநாகல் பிரதேசத்திற்கு பொலிஸார் சென்ற போது அவர் வீட்டில் இருந்து தலைமறைவாகியுள்ளார்.

வைத்தியரை குற்றவாளி என தீர்ப்பளித்த நீதிபதி இளஞ்செழியன் 15 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையும் பாதிக்கப்பட்ட பெண்னிற்கு 10 இலட்சம் நஷ்ட ஈடு செலுத்த வேண்டும் எனவும் தீர்ப்பளித்தார்.

பெண் உதவியாளருக்கு 5 ஆண்டு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.

தலைமறைவாகியுள்ள வைத்திய அதிகாரியை கைது செய்ய விசேட பொலிஸ் குழு அமைத்து நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கொழும்பு பொலிஸ்மா அதிபர் திருகோணமலை பொலிஸ்மா அதிபர் ஆகியோருக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் கைது செய்யும் பிடியாணை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குறித்த வைத்தியர் நாட்டை விட்டு வெளியேறாத வகையில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

-திருகோணமலை நிருபர் பாருக்-

Related posts