தமிழகம் முழுவதும் பயணம் செய்ய ரஜினிகாந்த் திட்டம்

ரஜினிகாந்த் செப்டம்பரில் தமிழகம் முழுவதும் பயணம் செய்யும் திட்டத்தில் இருக்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் கடந்த 23 ஆண்டுகளுக்கு மேலாக வலியுறுத்தி வருகின்றனர். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு இந்த கோரிக்கை அவரது ரசிகர்கள் மத்தியில் மேலும் வலுத்தது. இதைத்தொடர்ந்து கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ரசிகர்கள் சந்திப்பை ரஜினிகாந்த் நடத்தினார். அப்போது தான் அரசியலுக்கு வருவதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.

இந்த அறிவிப்பை வெளியிட்டு, 2 ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும், ரஜினிகாந்த் தனிக்கட்சி தொடங்காதது அவரது ரசிகர்கள் மத்தியில் சற்று ஏமாற்றத்தையும், வருத்தத்தையும் அளித்து. நாடாளுமன்ற தேர்தலிலும், சட்டசபை தொகுதி இடைத்தேர்தலிலும் எந்த முடிவையும் அறிவிக்காமல் ரஜினிகாந்த் தனது ரசிகர்களுக்கு மவுனத்தையே பரிசாக தந்தார்.

அவ்வப்போது, மத்திய அரசுக்கு ஆதரவாக சில கருத்துக்களை ரஜினிகாந்த் தெரிவித்து வந்ததால் அவர் கட்சியை தொடங்கினாலும், பா.ஜ.க.வுடன் இணைந்தே செயல்படுவார் என்றும் அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது.

இந்நிலையில், 2020-ம் ஆண்டு தனது கடைசி பட்ஜெட்டைச் சமர்ப்பிக்க அதிமுக அரசு தயாராகிக் கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் வரும் ஏப்ரலில் கட்சி ஆரம்பிப்பது என்று முடிவு செய்துள்ள ரஜினிகாந்த் அதைத் தொடர்ந்து மக்களுடன் தீவிரமாக இயங்கத் தயாராகி விட்டார்.

ரஜினி மக்கள் மன்றத்தின் முக்கியமான சிலநிர்வாகிகளையும் வழக்கம் போல் தனது அரசியல்,கலை நண்பர்கள் சிலரையும் வீட்டுக்கு அழைத்து வெகுநேரம் விவாதித்திருக்கிறார். சிலர் சித்திரை மாதம் அரசியலில் முத்திரை பதிப்பார் என்கிறார்கள்.

எட்டு இடங்களில் மாநாடு போடுவது என்றும் அதற்கு முன்னதாக செப்டம்பரில் தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்வது என்றும் திட்டத்தில்
இருக்கிறார். திறந்த வேனில் நின்று மக்களைச் சந்திப்பதா அல்லது ஆங்காங்கே நடந்து சென்று மக்களைச் சந்திப்பதா? என்பது குறித்தும்
ஆலோசித்துக் கொண்டிருக்கிறார்.

ஏற்கெனவே ரஜினி அங்கே மாநாடு போடுகிறார், இங்கே மாநாடு போடுகிறார் என்று பல்வேறு தகவல்கள் வந்தன. ஆனால், ரஜினி இப்போதுதான் முதல் மாநாடு பற்றி தனக்கு நெருக்கமானவர்களிடம் ஆலோசித்துக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Related posts