இன்றைய தமிழக திரை செய்திகள் 07.02.2020

‘வணக்கம் சென்னை’ படத்தை அடுத்து, சிவா-பிரியா ஆனந்த் இணைந்து நடிக்கும் படம், ‘சுமோ.’ இந்த படத்தை ஹோசிமின் டைரக்டு செய்ய, ஐசரி கே.கணேஷ் தயாரிக்கிறார்.

‘சுமோ’ என்பது குண்டு உடம்புடன் சண்டை போடுகிற வில்லனின் பெயர். சுமோக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்படும் முதல் இந்திய படம், இது. பெரும் பகுதி காட்சிகள் ஜப்பானில் படமாக்கப்பட்டன. படத்தை பற்றி டைரக்டர் ஹோசிமின் கூறியதாவது:-

‘‘சிவாவின் வித்தியாசமான நடிப்பில், படம் உருவாகி வருகிறது. முக்கிய கதாபாத்திரங்களில் வி.டி.வி.கணேஷ், யோகி பாபு ஆகிய இருவரும் நடிக்கிறார்கள். குழந்தைகள் முதல் வயதானவர் வரை, ரசிக்கக் கூடிய ஜனரஞ்சகமான படம், இது.

கதாநாயகனாக நடிப்பதுடன், படத்தின் திரைக்கதை-வசனத்தையும் சிவாவே எழுதியிருக்கிறார். படம் வேகமாக வளர்ந்து வருகிறது.’’

——

சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் ஒரு புதிய படத்தை ஆர்.கண்ணன் டைரக்டு செய்து வந்தார். பெயர் சூட்டப்படாமலே இந்த படம் வளர்ந்து வந்தது.

படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்த நிலையில், இந்த படத்துக்கு, ‘பிஸ்கோத்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.

இதில், சந்தானம் 3 தோற்றங்களில் நடித்து இருக்கிறார். அவருக்கு ஜோடியாக தாரா அலிஷா பெர்ரி, சுவாதி முப்பாலா ஆகிய இருவரும் நடித்துள்ளனர். இவர்களில் தாரா அலிஷா பெர்ரி, ‘ஏ 1’ படத்தில் ஏற்கனவே சந்தானம் ஜோடியாக நடித்து இருந்தார்.

மற்றும் ஆனந்தராஜ், மொட்டை ராஜேந்திரன், ‘ஆடுகளம்’ நரேன் ஆகியோரும் நடித்து இருக்கிறார்கள். ஆர்.கண்ணன் தயாரித்து டைரக்டு செய்து இருக்கிறார். படத்தின் உலக வினியோக உரிமையை கே.ரவீந்திரன் பெற்றுள்ளார்.

நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து படம் வளர்ந்துள்ளது. படப்பிடிப்பு சென்னை, ஐதராபாத் ஆகிய நகரங்களில் நடைபெற்று முடிவடைந்தது. ஐதராபாத்தில் சுமார் ஒன்றரை கோடி செலவில் பிரமாண்டமான அரண்மனை அரங்கு போடப்பட்டு 20 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றது.

——-

மூன்றாம் பிறை’ உள்பட பல வெற்றி படங்களை தயாரித்த பட நிறுவனம், டி.ஜி.தியாகராஜனின் சத்யஜோதி பிலிம்ஸ். இந்த நிறுவனத்தின் தயாரிப்பில், தனுஷ் கதாநாயகனாக நடித்த ‘பட்டாஸ்’ படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

‘பட்டாஸ்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து தனுஷ் கதாநாயகனாக நடிக்கும் இன்னொரு புதிய படத்தையும் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது.

கார்த்திக் நரேன் டைரக்டு செய்கிறார். இவர், ‘துருவங்கள் பதினாறு,’ ‘மாபியா,’ ‘நரகாசுரன்’ ஆகிய படங்களை டைரக்டு செய்தவர். இது, தனுஷ் நடிக்கும் 43-வது படம். இதில், அவருக்கு ஜோடியாக ஒரு பிரபல நாயகி நடிக்கிறார். மற்ற நடிகர்-நடிகைகள் முடிவாகவில்லை. ஜீ.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.

பொல்லாதவன், ஆடுகளம், மயக்கம் என்ன, அசுரன் ஆகிய படங்களை தொடர்ந்து தனுசுடன் ஜீ.வி.பிரகாஷ்குமார் கைகோர்க்கும் 5-வது படம், இது.

Related posts