ரஜினி படத்தில் வக்கீலாக நயன்தாரா?

ரஜினி படத்தில் நயன்தாரா வக்கீலாக நடிக்க இருப்பதாக இணைய தளங்களில் தகவல் பரவி வருகிறது.

ரஜினியின் தர்பார் பொங்கலுக்கு திரைக்கு வந்தது. தற்போது சிவா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இது ரஜினிக்கு 168–வது படம். கிராமத்து பின்னணியில் விவசாய கதையம்சம் உள்ள படமாக தயாராவதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ் ஆகிய 3 கதாநாயகிகள் நடிப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

குஷ்புவும், மீனாவும் ரஜினிகாந்த் மனைவிகளாக வருகிறார்கள் என்றும் முதல் மனைவியான குஷ்புவை பிரிந்து மீனாவை 2–வது திருமணம் செய்து கொள்வதால் ரஜினியை பழிவாங்க குஷ்பு முயற்சிப்பதுபோல் அவரது கதாபாத்திரத்தை உருவாக்கி இருப்பதாகவும் கூறப்பட்டது. ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் திரைப்பட நகரில் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது.

இந்த படத்தில் நயன்தாராவும் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக படக்குழு அறிவித்து உள்ளது. படத்தில் அவர் வக்கீலாக நடிக்க இருப்பதாக இணைய தளங்களில் தகவல் பரவி வருகிறது. இதுவரை நயன்தாரா வக்கீல் கதாபாத்திரத்தில் நடிக்கவில்லை. ஆனாலும் படக்குழுவினர் இதனை உறுதிப்படுத்தவில்லை.

சிவா இயக்கத்தில் வரவேற்பை பெற்ற விஸ்வாசம் படத்தில் அஜித் ஜோடியாக நயன்தாரா வந்தார். முந்தைய தர்பார் படத்திலும் சந்திரமுகி, குசேலன், சிவாஜி படங்களிலும் ரஜினியுடன் நடித்து இருந்தார். படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. மன்னவன், வியூகம், அண்ணாத்த ஆகிய பெயர்களில் ஒன்றை வைக்க பரிசீலிப்பதாக கூறப்படுகிறது.

Related posts