சுதந்திர சதுக்கத்தில் கோலாகல விழா

இலங்கையின் 72 ஆவது சுதந்திர தின நிகழ்வு இன்று கொழும்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையில் கொண்டாடப்படவுள்ளது.

கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நான்கரை மணித்தியாலங்களுக்கு மிகவும் எளிமையான முறையில் கொண்டாடப்படவுள்ள 72ஆவது சுதந்திர தின வைபவத்தை நேரில் கண்டு களிப்பதற்காக முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட பெருந்திரளான மக்கள் வருகை தரவுள்ளனர்.

இதேவேளை சுதந்திர தினமாகிய இன்று நாட்டுக்கும் மக்களுக்கும் ஆசி வேண்டி சமய அனுஷ்டானங்களும் இடம்பெறவுள்ளன. மயூரபதி பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா மற்றும் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் விசேட பூசை, வழிபாடுகள் நடத்தப்படும். அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர்களான பைஸர் முஸ்தபா, காதர் மஸ்தான் மற்றும் ஏ.எச்.எம் பெளசி ஆகியோர் தலைமையில் கொள்ளுப்பிட்டி ஜும்ஆ பள்ளிவாசலில் இஸ்லாமிய சமய நிகழ்வுகளும் பம்பலப்பிட்டி புனித மரியாள் தேவாலயத்தில் கத்தோலிக்க சமய நிகழ்வுகளும் பகத்தலே பெஸ்ட்ரிக் தேவாலயத்தில் கிறிஸ்தவ சமய நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன.

மேலும் தேச பிதா டி.எஸ் சேனநாயக்கவின் உருவச்சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்வும் இன்று காலை நடைபெறும். நாட்டின் எட்டாவது ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையில் நடைபெறும் முதலாவது சுதந்திரதின நிகழ்வு இதுவாகும். சுதந்திர சதுக்கத்தில் சுதந்திரதின நிகழ்வுகளுக்கான ஒத்திகைகள் சுமார் ஒருவார காலமாக முன்னெடுக்கப்பட்டு வந்தபோதும் கொழும்பின் இயல்புநிலை பெரிதும் பாதிப்புக்குள்ளாகாதிருந்ததையும் இம்முறை அவதானிக்க முடிந்தது.

சுதந்திர தினத்தை கெளரவிக்கும் வகையில் வீடுகள், கடைகள், கட்டடங்கள் மற்றும் வாகனங்களில் தேசியக் கொடியை பறக்கவிடுமாறு அரசாங்கம் பொதுமக்களை கேட்டுள்ளது.

இன்று காலை 7.30 மணிக்கு ஆரம்பமாகும் சுதந்திரதின நிகழ்வு நண்பகல் 12 மணி வரை தொடரும். நிகழ்வின் ஆரம்பத்தில் நாட்டின் சுதந்திரத்துக்காக உயிர்நீத்தவர்களுக்கென இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்படும். நிகழ்வின் ஆரம்பத்தில் ஜனாதிபதியை கெளரவிக்கும் வகையில் 21 பீரங்கி வேட்டுக்கள் தீர்க்கப்படும்.

அதனைதொடர்ந்து ஜனாதிபதி தேசியக் கொடியை ஏற்றி வைப்பார். நிகழ்வில் கலந்துகொள்ளும் 100 மாணவர்கள் தேசிய கீதத்தை பாடுவர். அதனை தொடர்ந்து ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார்.

இலங்கையின் 72வது சுதந்திர தினத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட 2ஆயிரத்து 500 பேர் கலந்து கொள்ளவுள்ளனர். இவர்களுக்கு மேலதிகமாக கொழும்பிலுள்ள வெளிநாட்டு தூதுவர்கள் உள்ளி்ட்ட 250 விசேட பிரமுகர்களும் சுமார் ஆயிரம் பொதுமக்களும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

முப்படையினர், பொலிஸார், தேசிய மாமணவர் படையணியென சுமார் 8 ஆயிரத்து 260 பேர் பங்குபற்றும் மரியாதை அணிவகுப்புகள் இன்றைய தினம் முன்னெடுக்கப்படும். மரியாதை அணிவகுப்புகளில் 4 ஆயிரத்து 325 இராணுவவீரர்கள், 860 கடற் படையினர், 815 விமானப்படையினர், 1382 பொலிஸார், 515 சிவில் பாதுகாப்பு படையினர் மற்றும் 315 தேசிய மாணவர் படையணி என்பன பங்கெடுக்கவுள்ளன.

சுதந்திரதின கொண்டாட்டங்களை முன்னிட்டு கொழும்பு மாவட்டத்தின் 15 அரச, தனியார் மற்றும் சர்வதேச பாடசாலைகளுக்கு நேற்று (03) முதல் விடுமுறை வழங்கப்பட்டுள்ளன.

மேலும் நிகழ்வில் கலந்துகொள்பவர்களுக்கும் ஏனையவர்களுக்கும் அசெளகரியம் ஏற்படாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் போக்குவரத்து ஒழுங்குகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதனடிப்படையில் கொழும்பு சுதந்திர சதுக்கத்திற்கூடான வீதி இன்று காலை 6 மணி முதல் நண்பகல் ஒரு மணிவரையில் மூடப்படுமென்றும் அப்பிரதேசத்தில் வசிப்பவர்கள் மட்டுமே உட்பிரவேசிக்க அனுமதிக்கப்படுவரென்றும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

நண்பகல் 12 மணிக்கு கடற்படையினரின் 25 பீரங்கி வேட்டுக்களுடன் நிகழ்வுகள் யாவும் நிறைவுபெறும்.

Related posts