கொரோனா பாதிப்பு என்பதா? நடிகர் போண்டா மணி கண்டனம்..!

கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக இணைய தளங்களில் பரவிய வதந்திக்கு நடிகர் போண்டா மணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

பிரபல நகைச்சுவை நடிகர் போண்டாமணி. இவர் 180–க்கும் மேற்பட்ட படங்களில் காமெடி வேடங்களில் நடித்து இருக்கிறார். வடிவேலுவுடன் இணைந்து அதிக படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் திரைக்கு வந்த தனுசின் பட்டாஸ் படத்திலும் நடித்துள்ளார். இந்த நிலையில் போண்டா மணிக்கு உலகை கதி கலங்க வைத்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக இணைய தளங்களில் தகவல் பரவியது.

இதனால் போண்டா மணியை ஆஸ்பத்திரியில் தனி வார்டில் அனுமதித்து சிகிச்சை அளிப்பதாகவும் கூறப்பட்டது. இது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. போண்டா மணி கொரோனா நோயில் சிக்கியது உண்மையா? என்று சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.

இந்தநிலையில் தனக்கு கொரோனா நோய் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக வெளியான தகவலை போண்டா மணி மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

‘‘நான் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளதாக ‘யூடியூப்’ தவறான தகவலை பரப்பி உள்ளனர். இது முற்றிலும் வதந்தி. நான் நலமாக இருக்கிறேன். படப்பிடிப்பில் பங்கேற்று நடித்துக்கொண்டு இருக்கிறேன். என்னை பற்றி தவறாக பரவும் பொய் செய்தியை யாரும் நம்ப வேண்டாம்.’’

இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

Related posts