அரசியல் இலஞ்சம் : தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முதலாவது இடத்தில்

அரசியல் இலஞ்சம் செய்வதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முதலாவது இடத்தில் உள்ளது என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் பிரதி அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

வாழைச்சேனை, பேத்தாழை பிரதேசத்தில் உள்ள தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் ஆதரவாளர்களுக்கான அரசியல் விழிப்புணர்வு கூட்டம் பேத்தாழை ஸ்ரீ முருகன் ஆலய வளாகத்தில் நேற்று (29) நடைபெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இலஞ்சம் வாங்கியுள்ளனர். அரசியல் இலஞ்சம் செய்வதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முதலாவது இடத்தில் உள்ளது. இது நாங்கள் சொல்லவில்லை அவர்கள் தான் சொல்கின்றார்கள்.

கடந்த காலத்தில் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவளிக்க 2 கோடி வழங்கப்பட்டது என்று பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கூறினார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் கொழும்பில் போட்டியிட பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் கேட்டதாகவும், இதற்கு பதிலாக பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் 15 கோடி ரூபா பெறுமதியான சொத்தை எனக்கு எழுதி வழங்க வேண்டும் என்று கூறியதாக பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அண்மையில் கூறினார்.

எவ்வளவு ஊழல் நிறைந்த கட்சியாக மாறி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்குத் துரோகம் செய்கின்ற கட்சியாக மாற்றமடைந்துள்ளது. இதன் பலன்தான் கட்சி சிதறிக் காணப்படுகின்றது. இதன் காரணமாக நாங்கள் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி என்ற கட்சியை ஆரம்பித்தோம்.

தேசிய கட்சியில் இருந்து நான் வெளிவந்த நோக்கம் என்னவென்றால் அபிவிருத்தியை மட்டும் செய்ய முடியும். தனித்து செயற்படும் பட்சத்தில் எங்களது உரிமைகளையும் அவ்வப்போது கேட்க முடியும். எங்களுக்கு உரிமை தேவை. தமிழ் தேசிய கூட்டமைப்பை ஆரம்பிக்கும் போது இருந்த ஜெயானந்தமூர்த்தி மற்றும் வெள்ளிமலை என்பவர்கள் மாத்திரம் மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது உள்ளார்.

வயது வந்தால் விட்டு செல்ல வேண்டும். சம்பந்தனை பாராளுமன்றத்தில ஏறி இறங்க நான்கு பேர் பிடித்து செல்ல வேண்டும். எதிர்கட்சி பதவியில் இருந்த காலத்தில் வைத்திருந்த மாளிகையை இன்னும் வழங்கவில்லை. செவியில் பிடிச்சி துரத்த போரார்கள். தமிழ் மக்களின் மரியாதையை போகச் செய்வதற்கே தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளதே தவிர. வேறு எதுவுக்கும் இல்லை.

எமது மக்கள் நல்ல நிலைமைக்கு வரும் வரைக்கும் எங்களது குரல் ஒழித்துக் கொண்டு இருக்கும். இடைக்கால அரசாங்க காலத்தில் ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு மற்றும் பட்டதாரிகளுக்கு வேலை வழங்கும் திட்டங்கள் மாத்திரம் நடைபெறும் என்றார்.

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் வாழைச்சேனை பிரதேச இளைஞர் அணித் தலைவர் எஸ். வசிகரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் மேலதிக செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ். ஜெயானந்தமூர்த்தி, வாகரை பிரதேச சபை உறுப்பினர் எஸ். துரைராஜசிங்கம், பேத்தாழை ஸ்ரீ முருகன் ஆலய தலைவர் த. சசிகுமார், வாழைச்சேனை பிரதேச மகளீர் அணி தலைவி திருமதி. எஸ். கீதா, கட்சி பிரதிநிதிகள், உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

-மட்டக்களப்பு நிருபர் குகதர்ஷன்-

Related posts