ரிஷாத் பதியுதீனின் சகோதரர் ரிப்கான் கைது..

போலி ஆவணங்கள் தயாரித்து தலைமன்னாரில் 280 ஏக்கர் காணியை விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீனின் சகோதரான றிப்கான் பதியுதீனை எதிர்வரும் பெப்ரவரி 06ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரட்ண உத்தரவிட்டார்.

சந்தேகநபர் நீதிமன்றத்தின் நடவடிக்கைகளை புறக்கணிக்கலாம் அல்லது எதிர்கால விசாரணைகளுக்கு தடங்கல் ஏற்படுத்தலாம் உள்ளிட்ட காரணங்களை முன்வைத்து நீதவான் சந்தேகநபருக்கு பிணை வழங்க மறுத்தார்.

280 ஏக்கர் காணி மோசடி தொடர்பான குற்றச்சாட்டு நீதிமன்றத்தின் விசாரணைக்கு வந்தபோது இது மிகவும் பாரதூரமான மோசடியென கடந்த 05 ஆம் திகதியன்று சுட்டிக்காட்டிய நீதவான், இக் குற்றச்சாட்டுடன் சம்பந்தப்பட்ட பிரதான சந்தேகநபரை கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பித்ததுடன் றிப்கான் பதியுதீனின் கடவுச்சீட்டையும் தடை செய்தார்.

தலைமன்னார் உப்புத்தரவு, வெட்டித்தரவு காணிக்கு போலி உறுதியை தயாரித்து விற்பனை செய்தமை தொடர்பாக கொழும்பு 10, சிறி சத்தர்ம மாவத்தையில் வசிக்கும் அப்துல் காசிம் சலாபி என்பவர் கடந்த 26.11.2015 இல் இரகசியப் பொலிஸாருக்கு செய்த முறைப்பாட்டையடுத்தே இவ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

40 ஏக்கர் காணித்துண்டு இரண்டை 240 இலட்ச ரூபாவுக்கு தான் வாங்கியதாகவும் பின்னர் தான் அக் காணிக்குச் சென்றவேளை, அக் காணிக்குள் பலாத்காரமாக நுழைந்த றிப்கான் பதியுதீன் தனக்கு அக்காணியில் உரிமை இல்லையென கூறியதாகவும் காசிம் சலாபி என்பவர் தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டிருந்தார்.

இச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபரின் சார்பில் ஆஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி காளிங்க இந்திரதிஸ்ச இக் குற்றச்சாட்டு பிணை வழங்கக்கூடிய குற்றச்சாடென நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

தன் தரப்புவாதிக்கு சொந்தமான இக் காணி 2017 ஆம் ஆண்டு ‘எக்ஸ்சாட்’ நிறுவனத்துக்கு விற்கப்பட்டிருந்ததாகவும் இப் பிரச்சினை தொடர்பான முறைப்பாடு முன்வைக்கப்பட்டதன் பின்னர் இருதரப்பும் இணக்கத்துக்கு வந்ததாகவும் சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

சந்தேகநபர் இச் சம்பவம் தொடர்பில் இணக்கத்துக்கு வர முயற்சி செய்துள்ளதாக விடயங்கள் தெரியவருகின்றபோதும், சந்தேகநபரை கைது செய்ய சென்றவேளை அவர் குறிப்பிட்ட விலாசத்தில் இருக்கவில்லை. அத்துடன் அவர் தனது தொலைபேசி இணைப்பையும் துண்டித்திருந்ததார்.

இந்நிலையில் அவருக்கு பிணை வழங்கினால் சந்தேகநபர் நீதிமன்றத்தை புறக்கணிக்கும் சந்தர்ப்பம் உள்ளதென சுட்டிக்காட்டிய நீதவான் அவருக்கு பிணை வழங்குவதை நிராகரித்தார்.

280 ஏக்கர் காணி தொடர்பான விசாரணைகள் நடைபெறுவதாகவும் அல்மினாபுரம் தில்லையடி புத்தளம் எனும் இடத்தில் வசிக்கும் பதியுதீன் மொஹமட் றிப்கான் என்பவர் வெளிநாட்டுக்கு செல்ல முற்பட்டால் விசாரணைகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் நீதிமன்ற அனுமதியின்றி அவர் வெளிநாட்டுக்குச் செல்வதை தடை செய்யுமாறும் இரகசியப் பொலிஸார் 1979 இலக்கம் 15 குற்ற வழக்கு கட்டளைச் சட்டம் 124 இன்படி நீதிமன்றில் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

குறிப்பிட்ட வேண்டுகோளையும் குற்றத்தின் தன்மையையும் கருத்திற்கொண்டு நீதவான், றிப்கான் பதியுதீனின் வெளிநாட்டுப் பயணங்களை தற்காலிகமாக தடைசெய்ய உத்தரவிட்டார்.

Related posts