குடும்ப பெண் கொலை; தாலிக்கொடி அபகரிப்பு

கூரிய ஆயுதமொன்றினால் தாக்கப்பட்டு குடும்ப பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் கழுத்துப் பகுதியிலும், நெஞ்சிலும் கத்தி வெட்டு காயங்களுடன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பதுளை, கைலகொட பகுதியில் இன்று (28) பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பதுளை பிரதான மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு முன்னாள் அமையப் பெற்றிருக்கும் வர்த்தக நிலையமொன்றின் உரிமையாளரின் மனைவியும் இரு பிள்ளைகளின் தாயுமான ரவி கௌரிதேவியே (48) இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இன்று காலை குறித்த பெண் ஆலயத்திற்குச் சென்று வீடு வந்தவுடன் மூன்று இளைஞர்கள் வீட்டிற்குள் பிரவேசித்து மேற்படி கொலையை நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.

மூன்று இளைஞர்களும் வீட்டிற்குள் புகுந்து அப்பெண் கழுத்தில் அணிந்திருந்த தாலிக் கொடியை அறுக்க முனைந்தபோது இளைஞர்களுக்கும் அப்பெண்ணுக்கும் இடையில் இழுபறி நிலை ஏற்பட்டது. அத்துடன் பெண் கூக்குரல் இடத்தொடங்கியதும் வீட்டிற்குள் புகுந்த இளைஞர்கள், பெண்ணின் கழுத்தை வெட்டியதுடன், நெஞ்சிலும் கத்தியினால் குத்தியுள்ளனர். அத்துடன் நகைகளை அபகரித்துக்கொண்டு இளைஞர்கள் தப்பிச் சென்றுள்ளதாக அறியப்படுகின்றது.

இதையடுத்து அயலவர்கள் பதுளைப் பொலிசாருக்கு அறிவித்ததின் பேரில் பொலிசார் ஸ்தலத்திற்கு விரைந்து கத்தியினால் குத்தப்பட்டிருந்த பெண்ணை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த வைத்தியர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுவரை கொலையாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. பதுளை பொலிசார் மோப்ப நாய் சகிதம் கொலையாளிகளை தேடி வலை விரித்துள்ளதுடன், தொடர்ந்தும் தீவிர புலன் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

(பதுளை தினகரன் விசேட நிருபர்- எம். செல்வராஜா)

Related posts