ஜெப் பெசோசின் அந்தரங்கம் வெளியாக காதலியே காரணம்

அமேசான் நிறுவனர் ஜெப் பெசோசின் அந்தரங்க செய்திகள் வெளியாக காதலியே மூல காரணம் என தெரியவந்து உள்ளது.

அமேசான் உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்று. ஜெஃப் பெசோஸ் அமேசான் நிறுவனத்தை தொடங்குவதற்கு முன்பே, நாவலாசிரியரான மக்கின்சியை காதலித்து, திருமணம் செய்துகொண்டார். 1994-ல் அமேசான் நிறுவனத்தைத் தொடங்கினார். இவர்கள் இருவரின் திருமணம் 1993 செப்டம்பரில் நடந்தது.

கடந்த சில ஆண்டுகளாகவே இருவரும் பிரிந்து வாழ்ந்துவந்த நிலையில் தங்களது விவாகரத்து முடிவை அறிவித்தனர்.

அமேசான் தலைமை நிர்வாக அதிகாரியின் தொலைபேசியை சவுதி அரசு அணுகியதாகவும், அவரது தனிப்பட்ட தகவல்கள் ஹேக் செய்யப்பட்டதாகவும் 2019 மார்ச் மாதம் பெசோஸின் பாதுகாப்புத் தலைவர் கூறியிருந்தார்.

அமேசான் நிறுவனர் ஜெப் பெசோசின் அந்தரங்க செய்திகளை வெளியிட்டது சவுதி அரேபியா என ஒரு பக்கம் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த செய்தியை வெளியிட்டதாக வேறொருவரின் பெயர் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த பெயர் மைக்கேல் சான்ச்செஸ்

அமேசான் நிறுவனரின் காதலியான, லாரன் சான்ச்செஸின் சகோதரர்தான் இந்த மைக்கேல். அதாவது, அமேசான் நிறுவனர் ஜெப் பெசோசுக்கும் தனக்கும் உள்ள உறவு குறித்து லாரன் தனது தோழிகளிடம் பேசிக்கொண்டதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது நினைவிருக்கலாம்.

இந்நிலையில், லாரன்தான் தங்களுக்கிடையிலான அந்தரங்க செய்திகளை தனது சகோதரருக்கு அனுப்பினார் என ஆதாரப்பூர்வமான செய்திகள் வெளியாகியுள்ளன. நடந்தது என்னவென்றால், தனது நிர்வாண படங்களை வெளியிடுவதாக, தன்னை என்குயிரர் என்ற பத்திரிகை மிரட்டுவதாக ஜெப் பெசோஸ் புகார் தெரிவித்திருந்தார்.

அந்த வழக்கு தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டிருந்தபோதுதான், இந்த எதிர்பாராத அதிர்ச்சி தகவல்கள் கிடைத்துள்ளன. என்குயிரர் பத்திரிகை, தங்களுக்கு அந்த செய்திகளை கொடுத்தது மைக்கேல் தான் என்றும், சவுதி உட்பட வேறு யாருக்கும் இந்த பிரச்சினையில் தொடர்பில்லை என்றும் தெளிவுபட தெரிவித்து விட்டது.

ஜெப் பெசோஸ் தனது காதலி லாரனுக்கு அனுப்பிய செய்திகளை, லாரன் தன் சகோதரன் மைக்கேலுக்கு அனுப்பியுள்ள நிலையில், லாரன் மைக்கேலுக்கு அனுப்பிய அந்தரங்க செய்திகள் உட்பட, பல முக்கிய ஆவணங்களை தாங்கள் கைப்பற்றியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக வால் ஸ்ட்ரீட் ஜெர்னல் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

அத்துடன், அந்தரங்க செய்திகளை என்குயிரர் பத்திரிகைக்கு கொடுத்ததற்காக மைக்கேலுக்கு 200,000 டாலர்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான ஆதாரத்தையும் தாங்கள் பார்த்ததாகவும் தெரிவித்துள்ளது. இதனால், எந்த காதலிக்காக தனது மனைவியை பிரிந்து, உலகின் நம்பர் ஒன் பணக்காரர் என்ற அந்தஸ்தை இழந்தாரோ, அந்த காதலியே பிரச்சினைகளுக்கு மூல காரணம் என்பது தெரியவந்ததால் இந்த ஜோடிக்குள்ளும் பிரச்சினை ஏற்படலாம் என கருதப்படுகிறது.

Related posts