72 வது தேசிய சுதந்திர தினத்திற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி

பாதுகாப்பான தேசம் – சுபீட்சமான நாடு´ என்ற தொனிப்பொருள் எதிர்வரும் 4 ஆம் திகதி இடம்பெறவுள்ள 72 வது தேசிய சுதந்திர தினத்திற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அரச நிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சு தெரிவித்துள்ளது.

அரச நிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சின் செயலாளர் சிறிபால ஹெட்டியாரச்சி தேசிய சுதந்திர தின வைபவம் குறித்து தெரிவிக்கையில், தேசிய சுதந்திர தினத்தை குறைந்த வருமானங்களைக் கொண்டவர்களுக்கான ஊக்குவிப்பு மற்றும் கம்பீரமான தேசிய தின வைபவமாக நடத்துவதற்தே ஜனாதிபதியினதும், பிரதமரினதும் நோக்கம் என்றார்.

கொழும்பு 07, சுதந்திர சதுக்கத்தில் இடம்பெறவுள்ள வைபவத்திற்காக முப்படை மரியாதை அணிவகுப்பு, கலாசார நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை இதில் இடம்பெறும். விரு – ஜன பதனம என்ற அமைப்பிற்கு இம்முறை சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.

பிரதம அதிதிகளாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.

மஹாசங்கத்தினரின் தலைமையில் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், தூதுவர்கள் அடங்கலாக சுமார் 5 ஆயிரம் பேர் இதில் கலந்துகொள்ள உள்ளனர். பொது மக்களுக்கும் இதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

2004 ஆம் ஆண்டிற்குப் பின்னர், கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் தேசிய தின வைபவம் இம்முறை நடைபெறுகின்றமை விசேட அம்சமாகும். முப்படையினரின் அணிவகுப்பு, கடற்படை மற்றும் விமானப் படைகளின் சாகச நிகழ்ச்சிகள் ஆகியன நிகழ்வை அலங்கரிக்கவுள்ளன.

தேசிய தின வைபவத்தை முன்னிட்டு அனைத்து அரச நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் தேசிய கொடியை ஏற்றி வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதற்காக ஒரு வார காலம் ஒதுக்கப்பட்டுள்ளது.

தேசிய தின வைபவத்திற்கு அமைவாக மாவட்ட மற்றும் மாகாண மட்டத்தில் வைபவங்கள் இடம்பெறவிருப்பதாக அமைச்சின் மேலதிக செயலாளர் கே.ஜி. தர்மதிலக தெரிவித்தார். இதற்கான சுற்றிநிரூபம் வெளியிடப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Related posts