ரஜினிக்காக நீதிமன்றத்தில் வாதாடத் தயார்: சுப்ரமணியன் சுவாமி

நடிகர் ரஜினிகாந்த் பெரியார் குறித்து பேசிய பேச்சில் அவருக்கு பின்னால் தாம் நிற்பதாகவும், அவருக்காக நீதிமன்றத்தில் வாதாடவும் தயார் என பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடந்த துக்ளக் ஆண்டு விழாவில் பேசிய ரஜினி, திமுக தலைவர் கருணாநிதி, முரசொலி, பெரியார் பற்றி குறிப்பிட்டுப் பேசிய நிகழ்வு சர்ச்சைக்குரியதாக மாறியது. இரு தரப்பிலும் சமூக வலைதளங்களில் காரசாரமாக மோதிக்கொண்டனர்.
அன்றிரவே திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ரஜினியை இடித்துரைக்கும் வண்ணம் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். ரஜினியின் கருத்துக்கு திராவிடர் கழகம், திராவிடர் விடுதலை கழகம் எதிர்வினையாற்றின.

அவரது பேச்சுக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. பெரியார் குறித்து அவதூறு கிளப்புவதாக திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கோவையில் ரஜினி மீது புகார் அளிக்கப்பட்டது.

அதேபோன்று சென்னையிலும் பெரியார் பற்றிய பொய்யான தகவலைப் பரப்பி பெரியாரின் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் நோக்குடன் வதந்தி பரப்புவதாக ரஜினிகாந்த் மீது திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் அதன் சென்னை மாவட்டச் செயலாளர் உமாபதி புகார் அளித்திருந்தார்.

இந்நிலையில் தனது கருத்தில் உறுதியாக இருப்பதாகவும், தான் மன்னிப்புக் கேட்கப்போவதில்லை என்றும் ரஜினிகாந்த் தெரிவித்தார். அவரது கருத்தை திமுக, அதிமுக தலைவர்கள் கண்டித்துள்ளனர். இந்நிலையில் ரஜினியை எப்போதும் விமர்சிக்கும் சுப்ரமணியன் சுவாமி ரஜினியை ஆதரித்து ட்விடரில் பதிவிட்டுள்ளார்.

அவரது ட்விட்டர் பதிவு:
“1971-ம் ஆண்டு ஈ.வெ.ரா நடத்திய ராமர் சீதா ஊர்வல விவகாரத்தில் ஒரு மாற்றத்துக்காக நான் ரஜினிகாந்த் பக்கம் நிற்கிறேன். அது உண்மைதான் அதைத்தான் ‘சோ’ துக்ளக்கில் பிரசுரித்தார். அந்த சினிமா நடிகர் (ரஜினி) அவரது நிலைப்பாட்டில் உறுதியாக நின்றால் நான் அவருக்கு பின்னால் நின்று அவருக்கு தேவைப்பட்டால் அவருக்காக நீதிமன்றத்தில் வாதாடத்தயார்”
என தெரிவித்திருந்தார்.

அவரது ட்விட்டர் பதிவை அடுத்து அவரை ரஜினிகாந்த் தொடர்புக்கொண்டு தனது நிலையை விளக்கியுள்ளார். அதையும் சுவாமி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அவரது பதிவு:
“ரஜினி இன்று என்னிடம் போனில் பேசினார், நான் அவரிடம் இந்த விவகாரத்தில் முழு ஆதரவு தெரிவிப்பதாக கூறினேன்”
என பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவுக்கு கீழே நெட்டிசன்கள் ஆதரித்தும் விமர்சித்தும் பதிவிட்டுள்ளனர்.

Related posts