தமிழர்கள் மத்தியில் மாற்றம் என்பது கட்டாயமானது!

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழ் மக்களுக்கு மாற்றம் என்பது கட்டாயமானது என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றின் கேள்விக்கு பதிலளிக்கையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், பொதுத் தேர்தல் ஒன்று வரவுள்ள நிலையில் தமிழ் மக்களுக்கு என்ன கூறவிரும்புகின்றீர்கள்?

கடந்த நான்கரை வருடமாக தமிழ் மக்களினுடைய பிரதிநிதிகள் என்ன செய்தார்கள் என்பதை தமிழ் மக்கள் அறிவார்கள். ஒரு மாற்றம் என்பது தமிழ் மக்களுக்கு நிச்சயமான ஒரு தேவை. வடக்கு – கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திகள் முன்னெடுத்து செல்லப்பட வேண்டும் என்பது ஒரு விடயம். அதே நேரம் நீண்டகாலமாக மக்கள் போராடி உயிர்தியாகம் செய்திருக்கின்றார்கள்.

அந்த உயிர் தியாகத்தின் முக்கிய நோக்கம் இந்த மண்ணில் தமிழ் மக்களினுடைய இருப்பு பாதுகாக்கப்படவேண்டும், மொழி பாதுக்காக்கப்பட வேண்டும், கலாசாரம், பண்பாடுகள், நிலம் பாதுகாக்கப்பட வேண்டும் அந்த தேவைகளுக்காகத் தான் இந்த நீண்ட போராட்டம் நடைபெற்றது.

அந்தக் காரணங்களுக்காகத் தான் இந்த மண்ணில் பல இலட்சம் மக்கள் உயிர் நீத்திருக்கின்றார்கள். பல்லாயிரம் கோடி பெறுமதியான சொத்துக்களை நாம் இழந்திருக்கின்றோம். இதற்காக ஒரு தலைமுறையே போராடி இருக்கின்றது.

அந்த வகையில் தமிழ் மக்களுக்கு ஒரு கௌரவமான தீர்வு என்பது முக்கியம். எதிர்காலத்தில் தங்களது தலைவிதியை தாங்களே தீர்மானிக்க கூடிய வகையில் தங்களது எதிர்காலத்தை தாங்களே திட்டமிடக் கூடிய வகையில் தங்கள் அபிவிருத்தி முயற்சிகளை தாங்களே ஏற்படுத்தக் கூடிய வகையில் அவர்களுக்கு அதிகாரங்கள் அவசியம். ஆகவே, ஒரே நாட்டுக்குள் அவ்வாறானதொரு அதிகார பகிர்வு என்பது முக்கியமானதொரு விடயம்.

ஆகவே, அபிவிருத்தி, அரசியல் தீர்வு ஆகிய இரண்டு விடயங்களையும் எவ்வாறு சமாந்தராமாக கொண்டு செல்வது என்பதை நாங்கள் தீர்மானிக்க வேண்டும்.

ஏற்கனவே, தமிழ் தேசியக் கூட்டமைப்பு அந்த விடயங்களில் நிறையவே தோல்விகளையே சந்தித்து இருக்கின்றது. அவர்கள் பல முயற்சிகளை மேற்கொள்ளவில்லை என்பதும் எடுத்துக் கொண்ட சில முயற்சிகள் முற்று முழுதாக அவர்களின் நடவடிக்கை காரணமாக தோல்வியில் முடிந்தது என்பது தான் வெளிப்படையானது.

அவர்கள் தமிழ் மக்களுக்கு சாதனைகளை புரிகின்றோம் என்ற அடிப்படையில் உண்மையாகவே அவர்கள் கடந்த மைத்திரி, ரணில் அரசாங்கத்தை பாதுகாப்பது தான் அவர்களது முதன்மையான வேலைத் திட்டமாக இருந்தது. அந்த வேலைத் திட்டத்தை அவர்கள் பாராளுமன்றத்திலும், உயர் நீதிமன்றத்திலும், ஜெனீவாவிலும் இலங்கை அரசாங்கத்திற்காக போராடி இருக்கின்றார்கள்.

இலங்கை தமிழர் பிரச்சினை தொடர்பாக கடந்த அரசாங்கத்துடன் இணைந்து இவர்களால் ஒரு விடயத்தை கூட சாதிக்க முடியவில்லை என்பது தான் யதார்த்தம். இந்த நிலையில் தமிழ் தலைமைத்துவத்தில் மாற்றம் என்பது அவசியம் தமிழ் மக்களினுடைய தேசிய இனப்பிரச்சினைக்கு உரிய தீர்வை முன்னெடுத்து செல்லக் கூடியவர்கள் அதற்கான காத்திரமான வழிமுறைகளை கண்டறிந்து செயற்படக் கூடியவர்களை மக்கள் தெரிவு செய்ய வேண்டும்.

ஆகவே, அந்த மாற்றத்தை நோக்கி வருகின்ற பொது தேர்தலில் தமிழ் மக்கள் யோசித்து வாக்களிக்க வேண்டும். இப்போது பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தங்களுக்கு மாத்திரம் தான் வாக்களிக்க வேண்டும் என்ற கோரிக்கையை பரவலாக முன்வைத்து வருகின்றார்கள். ஆனால், அவர்களுக்கு மாத்திரம் நாங்கள் வாக்களித்ததனால் அவர்கள் எவ்வளது தூரம் தமிழ் மக்களை ஏமாற்றி இருக்கின்றார்கள் என்பது வெளிப்டையானதும், அது கடந்த நான்கரை வருடகால வரலாறு ஆகவும் இருக்கின்றது.

ஆகவே, மீண்டும் நாங்கள் அந்த தவறை செய்வோமாக இருந்தால் இதிலும் விட மோசமான தவறுகளைத் தான் அவர்கள் செய்வார்களே தவிர இதனை சரியான ஒரு வழித்தடத்தில் கொண்டு செல்ல மாட்டார்கள் என்பது தான் ஒரு யதார்த்தமான விடயம். இந்த விடயங்களை உணர்ந்து ஒரு மாற்றத்தை நோக்கி நாங்கள் நடைபோட வேண்டும். அந்த வகையில் நிச்சயமாக சரியானதொரு மாற்றத்திற்காக தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்பது தான் எங்களுடைய கோரிக்கை என தெரிவித்தார்.

-வவுனியா தீபன்-

Related posts