எடை குறைத்ததால், இந்தி படத்தில் இருந்து கீர்த்தி சுரேஷ் நீக்கம்

எடையை குறைத்ததால், இந்தி படத்தில் இருந்து நடிகை கீர்த்தி சுரேஷ் நீக்கப்பட்டார்.

மறைந்த பழம்பெரும் நடிகை சாவித்திரி வாழ்க்கையை மையமாக வைத்து தமிழில் நடிகையர் திலகம், தெலுங்கில் மகாநடி பெயர்களில் வெளியான படத்தில் நடித்து பிரபலமான கீர்த்தி சுரேஷ் அனைத்து மொழி திரையுலகிலும் கவனம் பெற்றுள்ளார். இந்தியில் ‘மைதான்’ படத்தில் நடிக்கவும் வாய்ப்பு வந்தது. அமித் ரவிந்தர்நாத் ஷர்மா இயக்குகிறார். போனிகபூர் தயாரிக்கிறார்.

இந்திய முன்னாள் கால்பந்து வீரர் மற்றும் பயிற்சியாளரான சையத் அப்துல் ரஹீமின் வாழ்க்கை கதையே இந்த படம். அஜய் தேவ்கான் சையத் அப்துல் ரஹீமாகவும், அவரது மனைவியாக கீர்த்தி சுரேசும் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. படப்பிடிப்பிலும் கீர்த்தி சுரேஷ் கலந்து கொண்டு நடித்தார்.

இந்த நிலையில் ‘மைதான்’ படத்தில் இருந்து கீர்த்தி சுரேசை திடீரென்று நீக்கி விட்டு பிரியாமணியை ஒப்பந்தம் செய்துள்ளனர். மைதான் படத்துக்காக கீர்த்தி சுரேஷ் உடற்பயிற்சி செய்து உடம்பை குறைத்தார். இதுவே அவர் நீக்கத்துக்கு காரணம் என்கின்றனர்.

இதுகுறித்து பட நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“அஜய் தேவ்கானுக்கு ஜோடியாகவும், ஒரு குழந்தைக்கு அம்மாவாகவும் நடிக்க கீர்த்தி சுரேசை தேர்வு செய்தபோது அதற்குரிய தோற்றத்தில் இருந்தார். ஆனால் தற்போது எடை குறைந்து ஒல்லியாகி விட்டார். கீர்த்தி சுரேசை வைத்து சில நாட்கள் படப்பிடிப்பை நடத்தினோம். குழந்தைக்கு அம்மாவாக நடிக்க அவரது உடல்வாகு பொருந்தவில்லை.”

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Related posts