அரவிந்தசாமியின் எம்.ஜி.ஆர். தோற்றம் வெளியானது

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை ‘தலைவி’ என்ற பெயரில் படமாகிறது. தமிழில் ‘தாம்தூம்’ படத்தில் கதாநாயகியாக வந்த பிரபல இந்தி நடிகை கங்கனா ரணாவத், ஜெயலலிதா வேடத்தில் நடிக்கிறார். கதாபாத்திரத்துக்காக பரதநாட்டியம் கற்று நடித்து வருகிறார். விஜய் டைரக்டு செய்கிறார்.

தலைவி படத்தை விஷ்ணுவர்தன் இந்தூரி, சாய்லேஷ் சிங் ஆகியோர் தயாரிக்கின்றனர். திரைக்கதையை விஜயேந்திர பிரசாத் எழுதி உள்ளார். பாகுபலி படத்துக்கும் இவர்தான் திரைக்கதை எழுதி இருந்தார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகிறது.

இந்தி பதிப்புக்கு ‘ஜெயா’ என்று தலைப்பு வைத்தனர். ஆனால் கங்கனா ரணாவத் பெயரை மாற்ற வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதால் இந்தியிலும் தலைவி பெயரையே வைத்து இருப்பதாக கூறப்படுகிறது. தலைவி படத்தில் எம்.ஜி.ஆர். வேடத்தில் நடிக்க அரவிந்தசாமியை தேர்வு செய்தனர்.

இவர் ரோஜா, பம்பாய் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர். சில காலம் சினிமாவுக்கு இடைவெளி விட்டிருந்த அரவிந்தசாமி தற்போது மீண்டும் தீவிரமாக நடிக்க தொடங்கி உள்ளார். எம்.ஜி.ஆர். கதாபாத்திரத்துக்கு அவர் பொருத்தமாக இருப்பார் என்று படக்குழுவினர் அணுகியபோது உடனே ஒப்புக்கொண்டார்.

அரவிந்த சாமியின் எம்.ஜி.ஆர். தோற்றத்தை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி பலரும் பாராட்டி வருகிறார்கள். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

Related posts