மக்களிடையே மனமாற்றத்தை ஏற்படுத்த உறுதி பூணுவோம்

அனைத்து மக்களிடையேயும் புரிதலை ஏற்படுத்தி ஒற்றுமையை நிலைப்படுத்துவதற்காக இன்றைய தைத்திருநாளில் உறுதிகொள்வோமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுத்துள்ள தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களிடையே நல்ல மனமாற்றம் ஏற்படவேண்டியதன் அவசியத்தையும் தமது வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி சுட்டிக் காட்டியிருக்கின்றார். ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- உலகெங்கிலும் வாழும் தமிழ் மக்களால் கோலாகலமாகக் கொண்டாடப்படும் தைப் பொங்கலை கொண்டாடி மகிழும் இலங்கை தமிழ் சகோதர மக்களோடு நானும் இணைந்து கொள்கின்றேன். விவசாயத்தை தமது வாழ்வாதாரமாகக் கொண்ட மக்கள் இன்றைய நாளில் சூரிய பகவானை நோக்கி பக்தியுடன் வழிபாடாற்றி நன்றி செலுத்தி வாழ்வில் முன்னேற்றத்தை எதிர்பார்க்கின்றனர்.

தைப்பொங்கல் கொண்டாட்டங்களினால் மக்கள் மத்தியில் உருவாகும் புதிய பிணைப்புக்கள் குடும்ப அலகுகளிலிருந்து ஒட்டுமொத்த சமூகத்திற்கும் விரிவடைந்து செல்கின்றன. இதனூடாக பெற்றோர் பிள்ளைகள், ஆசிரியர்கள் மாணவர்கள், உறவினர்கள் நண்பர்கள் ஆகியோருக்கிடையிலும் ஆட்சியாளர்கள் தொண்டர்களுக்கிடையிலான மனித நேயமிக்க சமூக பிணைப்புக்கள் மென்மேலும் பலமடையும் என்பது எனது நம்பிக்கையாகும். தைப் பொங்கல் தின வழிபாட்டுக்குரிய சூரிய பகவான் நமது வாழ்விற்கு சக்தியையும் இருளை அகற்றும் ஒளியையும் கொண்டு வருவதைப் போன்று உன்னத மானிட பண்புகளினால் அனைவரது வாழ்வும் வளம் பெற வேண்டுமென பிரார்த்திக்கின்றேன்.

Related posts