நல்லிணக்கத்துடன் வாழும் வளமான நாட்டை உருவாக்குவோம்

அனைவரும் அமைதியுடனும், அன்புடனும், மகிழ்ச்சியுடனும், நல்லிணக்கத்துடனும், சகல வளங்களுடனும் வாழக்கூடிய வளமான இலங்கைத் திருநாட்டைக் கட்டமைக்கும் எமது கனவு நிறைவேற இந்தத் தைமாதம் வழிசமைக்க வேண்டும் என்று மனதாரப் பிரார்த்திப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, என் அன்பிற்கினிய தமிழ் மக்கள் அனைவருக்கும் தித்திக்கும் தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

எம் தாய்நாடாம் இலங்கைத் திருநாடு பல்லின மக்களை கொண்டஒருநாடாகும். இங்குவாழும் ஒவ்வொரு இனத்தவருக்கும் அவர்களுக்கே உரித்தான தனித்துவமும் பெருமையும் மிக்க கலை,கலாசார மற்றும் பண்பாட்டு விழுமியங்கள் பலவுள்ளன. இலங்கையில் உள்ள தமிழர்கள் மற்றும் உலகளாவிய ரீதியில் உள்ள தமிழர்களின் முக்கிய பண்பாட்டு விழாவாக தைப் பொங்கல் அமைகிறது. ‘தை’ என்பது புதியதொரு வளமான ஆரம்பத்தைக் குறித்து நிற்பதாகவே இயற்கையோடு ஒன்றி விவசாயத்தை மையமாகக் கொண்டு வாழ்ந்து வந்த பழந்தமிழர்கள் நம்பினார்கள். அதனால்தான் ‘தைபிறந்தால் வழி பிறக்கும்’ என்ற நம்பிக்கை என்னன்புத் தமிழ் மக்களிடையே உறுதியாக இருக்கிறது.

எமதுநாடு பல சவால்களைக் கடந்து முன்னேற்றப் பாதையை நோக்கி தற்போது மீண்டும் பயணப்படத் தொடங்கியிருக்கிறது. பிறக்கும் தை மாதம், எமது நாட்டினதும் மக்களினதும் வெற்றிப்பயணத்திற்கு நல்லதொரு ஆரம்பமாக இருக்கட்டும் என்பதே எனது அவாவாகும். அனைவரும் அமைதியுடனும், அன்புடனும், மகிழ்ச்சியுடனும், நல்லிணக்கத்துடனும், சகலவளங்களுடனும் வாழக்கூடிய வளமான இலங்கைத் திருநாட்டைக் கட்டியெழுப்பும் எமது கனவு நிறைவேற இந்தத் தை மாதம் வழிசமைக்க வேண்டும் என்று மனதாரப் பிரார்த்திக்கிறேன்.

Related posts