05.01.2020 காலை வரை சிறிலங்காவில் இடம் பெற்ற முக்கிய செய்திகள்

நாடு முன்நோக்கி பயணிக்க வேண்டுமாயின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ஆகியோரின் தலைமையில் புதிய அரசியல் அமைப்பு ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என பிவித்துறு ஹெல உருமயவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்பன்பில தெரிவித்துள்ளார்.

கம்பஹா பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார். கோட்டாபய ராஜபக்ஸ என்பவர் தனக்கு முன்பாக உள்ள பாரிய கல்லை உடைத்து முன்நோக்கி பயணிக்கும் ஒரு பலம் பொருந்திய கப்பலை ஒத்த தலைவராவார்.

ஆனப்படியால் சஜித் என்ற டைனமோ சிறிய துவிச்சக்கர வண்டிக்கு மாத்திரமே பொருந்தும் ஆனால் கோட்டா என்ற பாரிய கப்பலுக்கு பொறுந்தாது.

சஜித் ஜனாதிபதியுடன் சிறந்த நட்பை கொண்டிருக்கலாம் ஆனால் முச்சக்கர வண்டியின் டைனமோவை பயன்படுத்தி பாரிய கப்பலை முன்னோக்கி நகர்த்த முடியாது.

எனவே பொதுத் தேர்தலுக்கு பின்னரும் எதிர்க் கட்சித் தலைவர் பதவியை பெற்றுக்கொள்ள சஜித் பிரேமதாச முயற்சிகளை எடுக்க வேண்டும்´ என்றார்.

——–

மக்கள் ஆணையின் படி செயற்படவில்லை. தமது அரசாங்கத்திற்கு தோல்வி அடைய நேர்ந்ததாக பாராளுமன்ற உறுப்பினர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

நாம் எமக்கு கிடைத்த மக்கள் ஆணையின் படி செயற்படவில்லை. எமக்கு வழங்கப்பட்ட மக்கள் ஆணையின் மூலம் ராஜபக்ஷ ஆட்சியின் போது அபிவிருத்தி என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்ட தேசிய கொள்ளைக்கு ஏதாவது நடவடிக்கை எடுக்கப்படும் பொதுமக்கள் நம்பியிருந்தனர்.

எனினும், எமது பொலிஸ் அமைச்சரோ அல்லது நீதி அமைச்சரோ அதில் தலையிடவில்லை.

தற்போது எவ்வளவு வேகமாக பணியாற்றுகிறார்கள் என தெரிகிறது.

ஆளுங்கட்சியாக இருந்த போதும் 2018 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தோல்வி ஏற்பட்டது.

அதற்கு பிரதான காரணம் பொதுமக்கள் 2015 ஆம் ஆண்டு எமக்கு வழங்கிய மக்கள் ஆணையை மறந்து செயற்பட்டதும் மற்றும் ஊழல் மோசடியாளர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்காமையுமாகும் என அவர் தெரிவித்தார்.

——-

இலங்கையின் புதிய வீதி வரைபடத்தை இம்மாத நடுப்பகுதியில் வெளியிடுவதற்கு எதிர்பார்த்திருப்பதாக அளவீட்டு பணிப்பாளர் நாயகம் எஸ்.எம்.பி.ரி.சங்கக்கார தெரிவித்துள்ளார்.

புதிய வீதி வரைபடத்தின் நிர்மாணப்பணிகள் இறுதிக் கட்டத்தை அடைந்திருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

வங்கி மற்றும் அரச நிறுவனங்களை உள்ளடக்கிய பொது இடங்கள் தொடர்பான தகவல்கள் அந்த இடங்களுடன் தொடர்பு கொள்ளக்கூடிய தொலைபேசி இலக்கங்களுடன் புதிய வீதி வரைபடம் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

இலங்கையின் வீதி வரைபடம் இறுதியாக 2014 ஆண்டு பூர்த்தி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

——

யுத்தத்தால் காணாமல் ஆக்கப்பட்டோரை கண்டறிந்து தருமாறும் மற்றும் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறும் கோரி வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் நேற்று (04) வவுனியா தபால் அலுவலகத்திற்கு முன்னால் எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

காணாமல் ஆக்கப்பட்டோரை கண்டறிந்து தருமாறு கோரி ஆரம்பிக்கப்பட்ட போராட்டத்தின் 1050 ஆவது தினத்தை முன்னிட்டு மற்றும் கடந்த 27 வருடங்களுக்கு முன்னால் சிறைக்கைதியாக இருந்த போது உயிரிழந்த செல்லபிள்ளை மகேந்திரனை நினைவுகூரும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

காணாமல் ஆக்கப்பட்ட எமது பிள்ளைகளை தாம் உயிரிழக்கும் முன் பார்ப்பதற்கு வழிசமைக்குமாறு எதிர்ப்பில் ஈடுபட்டவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் தலையிட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரச்சினைகளுக்கு மற்றும் அரசியல் கைதிகள் தொடர்பில் உரிய தீர்வினை பெற்றுக் கொடுக்க வேண்டும் என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்தனர்.

இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் கூட்டு மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

—–

மட்டக்களப்பு சிறைச்சாலையில் சிறைக்கைதிகள் இன்று (05) கூரை மேல் ஏறி போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.

இன்று முற்பகல் வேளைகளில் சிறைச்சாலையின் கூரைக்கு மேல் ஏறிய 12க்கும் மேற்பட்ட சிறைக்கைதிகள் இந்த போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றனர்.

சிறைச்சாலையில் இருந்த கைதியொருவர் இன்று காலை மரணமானதை தொடர்ந்து குறித்த கைதியின் மரணம் தொடர்பில் நீதிபதி நேரடியாக வந்து விசாரணைகளை மேற்கொள்ள வலியுறுத்தியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

காய்ச்சலினால் சிறைச்சாலையில் சிகிச்சை பெற்று வந்த கைதியொருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

எனினும் குறித்த சிறைக் கைதியின் மரணம் தொடர்பில் சந்தேகம் வெளியிட்டுள்ள சிறைக் கைதிகள் நீதிபதி அவர்கள் நேரடியாக சிறைச்சாலைக்கு வந்து விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

குறித்த சிறைக் கைதிகளின் போராட்டத்தினை தொடர்ந்து சிறைச்சாலையின் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளதுடன் படையினரும் பாதுகாப்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சிறைக் கைதிகளின்போராட்டம் காரணமாக மட்டக்களப்பு சிறைச்சாலைப் பகுதியில் பதற்றத்துடன் கூடிய நிலைமை நிலவுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

Related posts