தர்பார் படத்தில் அரசியல் இல்லை” ஏ.ஆர்.முருகதாஸ் பேட்டி

“தர்பார் படத்தில் அரசியல் இல்லை. ரஜினிகாந்த், போலீஸ் கமிஷனராக நடித்து இருக்கிறார்” என்று டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ் கூறினார்.

ரஜினிகாந்த் நடித்து, ஏ.ஆர்.முருகதாஸ் டைரக்‌ஷனில் உருவாகி இருக்கும் புதிய படம், ‘தர்பார்’. இந்த படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நயன்தாரா நடித்து இருக்கிறார். ‘லைகா’ நிறுவனம் தயாரித்துள்ளது.

பொங்கல் விருந்தாக படம் திரைக்கு வர இருக்கிறது. இதுபற்றி டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

“தர்பார்’ மும்பையில் நடக்கும் போலீஸ் கதை. இதில் மும்பை போலீஸ் கமிஷனராக ரஜினிகாந்த் நடித்து இருக்கிறார். படத்தில் அரசியல் இல்லை. அரசியலை மனதில் வைத்து இந்த படத்தை நான் இயக்கவில்லை.

‘உலகம் சுற்றும் வாலிபன்’ படம் வெளிவந்த போது எம்.ஜி.ஆர். அரசியலில் இருந்தார். ஆனால் அந்த படத்தில் அரசியல் பற்றி பேசவில்லை. அதுபோலதான் ‘தர்பார்’ படத்தில் அரசியல் பற்றி ரஜினிகாந்த் பேசவில்லை. படத்தில் அவர் தாடியுடன் நடித்து இருக்கிறார். அவருடைய தாடிக்கு காரணம் சொல்லப்பட்டு இருக்கிறது.

ரஜினிகாந்த் ஒரு ஆச்சரியமான மனிதர். மனதால் அவர் ஒரு இளைஞர். எப்போதும் சுறுசுறுப்பாக காணப்படுவார். படப்பிடிப்பு நடக்கும் இடங்களில் அவருடைய கேரவனுக்கு வெளியே ஆயிரக்கணக்கான ரசிகர்கள் சூழ்ந்து இருப்பார்கள்.

எல்லோருடனும் ‘போட்டோ’ எடுத்துக் கொள்வார். பாதுகாப்பு பற்றி அவர் கவலைப்பட மாட்டார். அவரை வைத்து ‘சந்திரமுகி-2’ படத்தை எடுக்க ஆசைப்பட்டேன். அதற்காக ஒரு கதையை தயார் செய்து அவரிடம் சொன்னேன்.

ரஜினிகாந்துக்கு மிகவும் பிடித்துவிட்டது. அதில் சில தடைகள் இருந்ததால், அந்த திட்டத்தை கைவிட வேண்டியதாகி விட்டது.

‘தர்பார்’ படத்தில் நயன்தாரா ‘ஆர்கிடெக்’காக நடித்து இருக்கிறார். அவருடைய கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. படத்தின் கதையில், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. படப்பிடிப்பு முழுவதும் மும்பையில் நடந்தது. பொங்கல் விருந்தாக படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு இருக்கிறோம்.” இவ்வாறு ஏ.ஆர்.முருகதாஸ் கூறினார்.

Related posts