உன்னதத்தின் ஆறுதல்! வாரம் 19. 52 : பத்தாவது வெற்றி ஆண்டில்..

எல்லா ஜனத்துக்கும் சந்தோசமான செய்தி.
சகோதரன். பிரான்சீஸ் அந்தோனிப்பிள்ளை.
ரெகொபோத் ஊழியங்கள் – டென்மார்க்கிற்காக பிரார்த்திப்போம்.

இன்று உன்னதத்தின் ஆறுதல் என்னும் கிறிஸ்தவ நற்சிந்தனை தனது பத்தாவது ஆண்டை முடித்து, பதினோராவது புதிய ஆண்டுக்குள் காலடி எடுத்து வைக்கிறது. இந்த கிறிஸ்தவ நற்சிந்தனையை தொடர்ந்து இணையதளத்தில் பிரசுரிக்க முன் வந்தது மட்டுமல்லாமல், புலம்பெயர்ந்தவர்கள் மத்தியில் தேவனைக் குறித்து அறிந்து, அவரிடம் இருந்து ஆறுதலைப் பெற்றுக்கொள்வதற்கும், எழுத்தாற்றலை ஏற்ப்படுத்தி என்னை ஊக்குவித்த ஆசிரியர். செல்லத்துரை குடும்பத்தினருக்கு, எமது குடும்பத்தின ;சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதோடு, புதிய ஆண்டில் தேவ ஆசீர்வாதத்தையும், உயர்வையும் அவர்கள் அனைவரும் அடைந்து கொள்ள தேவன் கிருபை செய்வாராக.
வாசகநேயர்கள் அனைவரும் தமது அன்றாட வாழ்வில் இயேசுவின் பிறப்பை நினைவுருவதன்மூலம் சந்தோசத்தையும், மகிழ்ச்சியையும் தினமும் கண்டடைந்து மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துக்கிறோம்.

புதிய ஆண்டில் நாட்டில் பலமாறுதல்கள் நடைபெற காத்திருப்பதால், மாறுதல்கள்; தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல அனைத்து மக்களிற்கும் அமைதியை, ஆறுதலை, சுபீட்சத்தைப்பெற்று வழமுடன் வாழ தேவன் உதவி செய்யும்படியாக தேவனிடம் பிராத்திப்போம்.

அன்பின் பரலோக பிதாவே, நாம் யாவரும் ஒரு மனதோடு எமது தேசத்திற்காக உம்மை நோக்கிப்பார்க்கிறோம் அப்பா. உம்முடைய பிறப்பை நினைவுகூரும் இந்த வேளையில் தேசமும் மக்களும் அமைதியை, ஆறுதலை, சுபீட்சத்தைப் பெற்று வாழ உதவி செய்யும் அப்பா. இதுவரை காலமும் தேசமும் மக்களும் அடைந்த சிறுமை யில் இருந்து உமது நாமத்தினால் ஓர் நிதந்தர சமாதானத்துக்கான வழி பிறக்கட்டும். அமைதியும் சமாதானமும் தேசத்தையும் மக்களையும் ஆண்டு கொள்ளட்டும். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் நல்ல பிதாவே, ஆமென்.

தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுசர் சாயலானார் பிலிப்பியர் 2:7.

கிறிஸ்துவின் பிறப்பு எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோசத்தை உண்டாக்கும் நற்செய்தி என்று தேவதூதர்கள் அறிவித்தாலும், அன்று அது ஒரு சந்தோசமான செய்தியாக அமைந்ததா? ஒருகன்னி குழந்தையைப் பெற்றெடுக்க வேண்டி யேற்பட்டது. இது மரியாளுக்கு சந்தோச செய்தியா? தனக்கு நியமிக்கப்பட்டவள் கற்பவதியாகிவிட்டது தெரிந்தும் அவளை ஏற்றுக்கொள்ள நேரிட்டது யோசேப்புக்கு சந்தோசமான செய்தியா? மரியாளுக்கு பிரசவகாலம் வந்தபோது சத்திரத்தில் இடமில்லாமல் ஒரு மாட்டுத்தொழுவமே கிடைத்தது. இது சந்தோசமான செய்தியா?

பேரியவராக இருப்பார், உன்னதமானவரின் குமாரன் எனப்படுவார், யாக்கோபின் குடும்பத்தாரை அரசாளுவார், என சொல்லப்பட்ட அந்தக் குழந்தை பிறந்து கந்தைத் துணியில் சுற்றப்பட்டுக் முன்ணணையில் கிடத்தப்பட்டது. இது சந்தோச செய்தியா? இந்தச் செய்தியைக் கேட்டு ராஜாக்கள் கலங்கினர். மக்கள் கேள்விகள் எழுப்பினர். பிறந்தவர் ராஜா என்றால் அவரைப் பார்க்க வந்தவர்களோ மேய்ப்பர்கள். மொத்தத்தில் கிறிஸ்து பிறப்பு அன்று கொண்டாடப்படவில்லை. யாராலும் ஏற்றுக் கொள்ளப்படவுமில்லை. தமது பரலோக மேன்மையைகளை விட்டுவிட்டு நமக்காக மனிதனானவர் மாட்டுத் தொழுவத்தின் முன்னணையில் கிடந்தார். இதுதான் இயேசுவின் பிறப்பு.

இப்படியிருக்க, கிறிஸ்து பிறந்தார் என்பதை நினைவுகூருகின்ற இந்தநாளை பெரிய பண்டிகை ஆசாரிப்பாக்கி, அதன் நோக்கத்தை மறந்து, நமக்கு நாமே சந்தோசம் தருவிக்கிற நாளாக அதனை மாற்றிவிட்டது எப்படி? இன்று கிறிஸ்து பிறப்பின் நோக்கம் மறைந்த, பலபுதிய காரியங்கள் இக்கிறிஸ்மஸ் காலங்களில் தலைதூக்க ஆரம்பித்து விட்டது.

அன்றைய மரியாளின் அர்ப்பணம், யோசேப்பின் நீதி, செய்தி அறிந்து அறிவிக்க தீவிரித்த மேய்ப்பரின் ஆவல், எல்லாவற்றிற்கும் மேலாக தம்மையே முற்றிலும் தாழ்த்தி அடிமைக் கோலமாக்கி வந்துதித்த கிறிஸ்துவின் சிந்தை, இவை நமது வாழ்வில் உண்டா என்பதை சிந்திப்போமாக. அந்த சிந்தை இருக்குமானால் கிறிஸ்து பிறப்பு நமக்கு அர்த்தமுள்ளதும், பிறப்பின் பண்டிகை பிறருக்கு சாட்சியாகவும் அமையும் என்பதில் சந்தேகமில்லை. இந்தப் பண்டிகை நாள் நமக்கும் பிறருக்கும் மெய்யான மகிழ்ச்சியைக் கொண்டுவரும்படி நம்மை அர்ப்பணிப்போம்.

அன்பின் ஆண்டவரே, உம்மைத் தாழ்த்தி என்னைத் தேடிவந்த உமது சிந்தையை நானும் தரித்துக் கொள்ளவேண்டும் என்று தங்களைத் தாழ்த்தி, உம்மிடத்தில் ஒப்புக்கொடுக்க முன் வந்திருக்கும் அத்தனை பேருக்காகவும் உம்மிடத்தில் வருகிறேன். அவர்கள் எடுத்த தீர்மானம் அவர்கள் வாழ்வில் நிலைத்திருக்க தேவஆவியானவர் துணை செய்வாராக. இந்த உண்மையான நினைவுகூருதல் வாழ்வில் ஒளிமயமான வாழ்வை கண்டுகொள்ள உதவி செய்யும்படியாக இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே, ஆமென்.

நத்தார் நல் வாழ்துக்கள் உரித்தாகட்டும்.
கர்த்தர் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக!

Bro. Francis T. Anthonypillai. Rehoboth Ministries – praying for Denmark.

Related posts